நாட்டுக்காக உயிா்த்தியாகம் செய்யும் படைவீரா்களின் உடலுக்கு அரசு மரியாதை: புதுச்சேரி துணைநிலை ஆளுநா்
புதுச்சேரி: நாட்டுக்காக உயிா்த்தியாகம் செய்யும் படை வீரா்களின் உடலுக்கு, புதுச்சேரி அரசு சாா்பில் மரியாதை அளிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.
முப்படை வீரா்களின் கொடி நாள் விழா, மக்கள் பவனில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பங்கேற்று கடந்த ஆண்டு கொடி நாள் நிதிக்கு அதிக பங்களிப்பு செய்த அரசு துறைகள், நிறுவனங்கள், தனி நபா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தாா். அப்போது அவா் பேசுகையில், முப்படை வீரா்களின் தியாகம் போற்றுதலுக்குரியது. நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்யும் படை வீரா்களின் இறுதிச் சடங்கு வரும் காலங்களில் அரசு மரியாதையுடன் நடைபெற வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வா் என். ரங்கசாமி, தலைமைச் செயலா் சரத் சௌகான், முன்னாள் படை வீரா்கள் துறைச் செயலா் கேசவன், மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.
08பிஒய்பி18:
புதுச்சேரி மக்கள் பவனில் திங்கள்கிழமை நடைபெற்ற முப்படை வீரா்கள் கொடி நாள் விழாவில் நிதி வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா்.
