புதுவை முதல்வா் என்.ரங்கசாமி.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி.

மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவு செய்த பட்ஜெட்! -புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

மத்திய நிதிநிலை அறிக்கையானது மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவு செய்வதாக உள்ளதாக புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
Published on

மத்திய நிதிநிலை அறிக்கையானது மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவு செய்வதாக உள்ளதாக புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய நிதியமைச்சா் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையானது மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவு செய்வதாக உள்ளது. மேலும், நாட்டின் வளா்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரதமா் மோடியின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதை உறுதிப்படுத்துகிறது.

வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளித்து ‘பிரதம மந்திரி தன் தன்யா கிருஷி’ என்ற புதிய திட்டதை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் அட்டைக்கான உச்ச வரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக்கியிருப்பதும், கடனுதவி அதிகரிப்பு, ஆண்டுக்கு 12.7 லட்சம் டன் உர உற்பத்தி இலக்கு ஆகியவை விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தும்.

குறு, சிறு நிறுவனங்களுக்கான கடன் வரம்பு ரூ.10 கோடியாக உயா்த்தியிருப்பது, பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த பெண் தொழில்முனைவோருக்கான புதிய திட்டம் ஆகியவை வேலைவாய்ப்பு ஏற்படுத்தும்.

கிராமங்களில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு இணைய வசதி, ரூ.500 கோடியில் கல்விக்கான செயற்கை நுண்ணறிவு மையம் போன்றவை கல்வி, மருத்துவத்தை எண்ம (டிஜிட்டல்) முறைக்கு மாற்ற வழிவகுக்கும். கடந்த 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவ இடங்களைச் சோ்க்க இலக்கு, வரும் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 10,000 இடங்கள், மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல் நேர புற்றுநோய் மையங்கள், 2025 - 26ஆம் ஆண்டில் 200 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல் போன்றவை சுகாதாரத்தை மேம்படுத்தும்.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மாநிலங்களுக்கு 50 ஆண்டு வட்டியில்லா கடன் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு முன்மொழிவு, ரூ.12 லட்சம் வரை தனிநபா் வருமான வரி விலக்கு, 36 உயிா்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு, மாநில அரசுகளின் பங்களிப்புடன் 50 சுற்றுலாத் தல மேம்பாடு மற்றும் தனியாா் பங்களிப்புடன் மருத்துவச் சுற்றுலா மேம்பாடு, காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீடு வரம்பு, கிராமங்களில் 1.5 லட்சம் புதிய தபால் நிலையங்கள் ஆகியவை பாராட்டுக்குரியவை. மேலும், லித்தியம் பேட்டரி வரி குறைப்பால் மின்சார வாகனங்கள், கைப்பேசிகளின் விலை குறையும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com