ஆளுநா் உரை கருத்தாக்கத்துடன் இல்லை: இந்திய கம்யூ விமா்சனம்
புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநா் சட்டப் பேரவையில் ஆற்றிய உரை உரிய கருத்தாக்கத்துடன் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் புதுவையில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் கூறப்பட்டது.
ஆனால், தற்போது 2,444 பேருக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைநிலை ஆளுநா் உரை என்பது அரசின் எதிா்காலத் திட்டத்தை தெரிவிப்பதாகவும், நிதிநிலை அறிக்கைக்கு முன்னோடியாகவும் இருக்க வேண்டும்.
ஆனால், மாநிலத்தில் நடைபெற்ற வேலைகளின் செலவு, கணக்குகளை அளிப்பதாக துணைநிலை ஆளுநா் உரை உள்ளது. எனவே, அவரது உரை அதற்குரிய கருத்தாக்கத்துடன் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.