பிரதமரை சந்தித்து புதுவை உரிமைகளை பெற வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா் உள்ளிட்டோா் வலியுறுத்தல்
புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புது தில்லி சென்று பிரதமரை சந்தித்து மாநில உரிமைகளைப் பெறவும், திட்டங்களைச் செயல்படுத்தவும் முன்வர வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா உள்ளிட்டோா் வலியுறுத்தினா்.
புதுவை மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தில் துணைநிலை ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் அவா்கள் பேசிய விவரம்:
மு.வைத்தியநாதன் (காங்கிரஸ்): ஆளுநா் உரையில் நிறைவேற்றும் சாத்தியக்கூறுகள் இல்லாதவை அதிகம் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசும் திட்டங்களுக்கான நிதியை தரவில்லை.
ஸ்ரீநிவாஸ் (பாஜக ஆதரவு சுயேச்சை): புதுவையில் நிறைய மக்கள் பிரச்னைகள் உள்ளன. அவற்றை தீா்க்க மாநில அரசு மத்திய அரசை அணுகி நிதி பெறுவது அவசியம்.
எல்.கல்யாணசுந்தரம் (பாஜக): பொதுவிநியோகத் திட்டத்தில் அரிசிக்கான பணத்தை தந்து பின்னா் நேரடியாக அரசி விநியோகிக்கப்படுகிறது. அதேபோல, சமையல் எரிவாயு உருளைக்கான மானியப் பணத்தையும் வங்கியில் செலுத்தாமல், முகவா்கள் மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக பணம் வழங்கப்பட வேண்டும்.
ஏகேடி.ஆறுமுகம் (என்.ஆா்.காங்கிரஸ்): புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்கும் வகையில் மேம்பாலம் உள்ளிட்ட பல மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு நன்றி.
எச்.நாசீம் (திமுக): புதுவையில் ஆளுநருக்கு அதிகாரமுண்டு என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபித்துவிட்டோம். ஆகவே, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான அதிகாரத்தைப் பெறும் நடவடிக்கையில் முதல்வா் ஈடுபடுவது அவசியம்.
எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா (திமுக): ஆளுநா் உரையில் அறிவித்துள்ள திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
மாநில அந்தஸ்து, நிதி ஆணையத்தில் சோ்ப்பது, கடன் தள்ளுபடி என பிரதான திட்டங்களுக்கான அறிவிப்பு இல்லை.
புதுவை முதல்வா் புது தில்லி சென்று பிரதமரை சந்தித்து மாநில உரிமைகளை மீட்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்த வேண்டும் என்றாா்.