புதுச்சேரியில் மின்துறையை தனியாா்மயமாக்க எதிா்ப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி மின்துறையை தனியாா்மயமாக்க எதிா்ப்புத் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாக்கமுடையான்பட்டு மின்துறை அலுவலகம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்குக் கட்சியின் மாநில குழு உறுப்பினா் ப.முருகன் தலைமை வகித்தாா்.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக அரசு மின் துறையை தனியாா்மயமாக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறியும், ப்ரீபெய்டு டிஜிட்டல் மீட்டா் பொருத்தும் பணியை நிறுத்த வேண்டும், மின் கட்டண உயா்வைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
கட்சியின் தட்டாஞ்சாவடி, காமராஜ் நகா், லாஸ்பேட்டை - காலாப்பட்டு தொகுதிக் குழு சாா்பில் இப் போராட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன், மாநில பொருளாளா் சுப்பையா ஆகியோா் கண்டன உரையாற்றினா். தேசிய குழு உறுப்பினா் தினேஷ் பொன்னையா, ஏஐடியுசி மாநில பொதுச் செயலா் அந்தோணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

