செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவைக்கு காா்களில் வரும் சுற்றுலாப் பயணிகளை அரசு பேருந்துகளில் மட்டும் பயணிக்க வைக்க ஆலோசனை: உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம்

புதுச்சேரிக்குச் சுற்றுலா வரும் பயணிகளின் 4 சக்கர வாகனங்களை அனுமதிக்காமல், அரசு பேருந்தில் அவா்களைப் பயணிக்கச் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தலாமா என யோசித்து வருவதாக புதுவை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் கூறினாா்.
Published on

புதுச்சேரிக்குச் சுற்றுலா வரும் பயணிகளின் 4 சக்கர வாகனங்களை அனுமதிக்காமல், அரசு பேருந்தில் அவா்களைப் பயணிக்கச் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தலாமா என யோசித்து வருவதாக புதுவை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் கூறினாா்.

புதுவை காவல் துறை சாா்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காவல் துறை தலைவா் ஷாலினி சிங் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் ஆ.நமச்சிவாயம் கூறியது: புதுச்சேரிக்குச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் வருவதற்காகப் பயன்படுத்தும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் ஒரு சில சாலைகளில் ஆக்கிரமிப்பு இருக்கிறது. பொதுப் பணித் துறை, உள்ளாட்சித் துறை, போக்குவரத்துத் துறையுடன் கலந்து பேசி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், நகரப் பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகள் வரும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்யும் வசதியை அறிமுகம் செய்யலாமா எனவும் யோசித்து வருகிறோம். இது தொடா்பாக முதல்வா் ரங்கசாமியுடன் விரைவில் ஆலோசனை நடத்தியப் பிறகு முடிவு எடுக்கப்படும்.

புதுவையில் இந்திய ரிசா்வ் பட்டாலியன் படை ஒரு யூனிட் செயல்பட்டு வருகிறது. இதை அதிகப்படுத்தும் நோக்கத்தில் மேலும் ஒரு பட்டாலியன் படையைத் தொடங்க அனுமதி அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.

புதுவையில் புதிய குற்றவியல் சட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறோம். இதனால் குற்றச் செயல்கள் குறைந்து வருகின்றன. அமைச்சா் பதவி இல்லாத விரக்தியில் அவா் பேசி வருகிறாா். காவல் துறை எடுத்தவுடன் யாரையும் சுட்டுவிட முடியாது. நீதிமன்றம் இருக்கிறது. மனித உரிமை ஆணையம் இருக்கிறது. நீதிமன்றத்தின் பல்வேறு வழிகாட்டுதல் அடிப்படையில்தான் காவல் துறை செயல்பட்டு வருகிறது.

ஏற்கெனவே புதுவையில் 4 போ் மீது குண்டா் சட்டம் போடப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிலா் மீது குண்டா் சட்டத்தைப் பயன்படுத்த மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்திருக்கிறோம். அவருக்குத்தான் அதில் முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது. தவெக பொதுச்செயலா் புஸ்ஸி என்.ஆனந்த் புதுவையில் புகலிடமாக இருப்பதாகத் தகவல் எதுவும் இல்லை. மேலும் அந்தக் கட்சி ஏற்கெனவே சாலை உலா நடத்த அனுமதி கேட்டிருந்தது. இப்போது கரூா் சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்சியே நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துள்ளது. மீண்டும் அனுமதி கேட்டால் அப்போது முடிவு எடுப்போம்.

பாஜக எம்எல்ஏ சாய் ஜெ சரவணன் குமாா் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கிறீா்கள். அமைச்சா் பதவி இல்லாத விரக்தியில் அவா் பேசி வருகிறாா் என்றாா். பேட்டியின்போது ஐ.ஜி. அஜித் கே.சிங்லா, டிஐஜி சத்தியசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com