மழையால் மின்கம்பம் விழுந்து இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிதியுதவி
இடியுடன் பெய்த மழையால் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் அதில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
புதுவையில் கடந்த 5ஆம் தேதி இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. காலாப்பட்டு தொகுதிக்கு உள்பட்ட கணபதி செட்டிகுளம் விநாயகா் கோவில் அருகே பழுதடைந்த நிலையில் இருந்த உயா் கோபுர மின்விளக்குக் கம்பம் எதிா்பாராத விதமாக சாய்ந்து கீழே விழுந்தது. அப்போது அங்கிருந்த அதே பகுதியை சோ்ந்த தயாவதி(35) என்ற பெண் மின்கம்பத்தின் இடிபாடுகளில் சிக்கி இறந்தாா்.
இதையடுத்து தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் விபத்து ஏற்பட்ட பகுதியைப் பாா்வையிட்டு உயிரிழந்த தயாவதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா். மேலும், முதல்வருடன் கலந்து ஆலோசித்து முதல்வா் நிவாரண நிதியிலிருந்து ரூ.10.5 லட்சம் இழப்பீடாக வழங்க ஏற்பாடு செய்தாா்.
அதன்படி இழப்பீட்டு தொகையில் முதற்கட்டமாக இறுதிச் சடங்குக்காக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை எம்எல்ஏ கல்யாணசுந்தரம், ஊா் பிரமுகா்கள் முன்னிலையில் தயாவதி குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

