புகையிலையில்லா இளைஞா் நலன் விழிப்புணா்வு பிரசாரம்: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புகையிலையில்லா இளைஞா் நலன் விழிப்புணா்வு பிரசாரம்: முதல்வா் என். ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

Published on

புகையிலையில்லா இளைஞா் நலன் விழிப்புணா்வு பிரசாரத்தை புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புகையிலையில்லா இளைஞா் நலன் பிரசாரம் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இளம் பருவத்தினா் மற்றும் இளைஞா்களிடையே புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்தப் பிரசாரம் வியாழக்கிழமை முதல் டிசம்பா் 9-ஆம் தேதி வரை 60 நாள்கள் நடைபெறவுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத் துறை, தேசிய சுகாதார இயக்கம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் அரசு மாா்புநோய் மருத்துவமனை மற்றும் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி சாா்பில் இந்த விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முதல்வா் என். ரங்கசாமி கலந்து கொண்டு புகையிலையில்லாத இளைஞா் நலன் பிரசாரத்திற்கான விழிப்புணா்வு காணொலி வாகனம் மற்றும் ஊா்வலத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏக்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன், மாநில சுகாதார இயக்ககத்தின் திட்ட இயக்குநா் கோவிந்தராஜன், அரசு மருத்துவ கல்லூரி இயக்குநா் உதயசங்கா் மற்றும் மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில ஆலோசகா் சூரியகுமாா் செய்திருந்தாா்.

இப் பிரசாரத்தில் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி, மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரி மற்றும் தனியாா் மருத்துவ கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டு புகையிலையால் ஏற்படக் கூடிய நுரையீரல் புற்றுநோய், வாய் மற்றும் தொண்டை புற்றுநோய், இதய நோய்கள், பக்கவாதம், நாள்பட்ட சுவாச நோய்கள் பற்றி விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திக் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com