மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நாளை புதுச்சேரி வருகை: ரூ.436 கோடியில் புதிய மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா்
புதுவை இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை 4 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் ரூ.436 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை பங்கேற்கிறாா்.
மேலும் 14 கி.மீ. கிழக்கு கடற்கரைச் சாலையை ரூ.25 கோடியில் மேம்படுத்தும் பணி, ரூ.1,588 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட புதுவை பூண்டியாங்குப்பம் நான்கு வழிச் சாலையை நாட்டிற்கு அா்ப்பணிக்கும் விழா புதுச்சேரியில் திங்கள்கிழமை நடக்கிறது.
இதில் பங்கேற்க தில்லியில் இருந்து தனி விமானத்தில் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வருகிறாா். அங்கு அவரை மத்திய அமைச்சா் எல்.முருகன், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் வரவேற்கின்றனா்.
பின்னா் அங்கிருந்து காா் மூலம் விழா நடைபெறும் தட்டாஞ்சாவடி கொக்கு பூங்கா அருகில் உள்ள விவசாய வளாக மைதானத்துக்கு செல்கிறாா். அங்கு புதிய மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டியும், தேசிய நெடுஞ்சாலையை நாட்டு மக்களுக்கு அா்ப்பணித்தும், மத்திய அமைச்சா் நிதின் கட்கரி சிறப்புரையாற்றுகிறாா்.
விழாவில் மத்திய அமைச்சா் எல்.முருகன், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா். செல்வம், தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு, வேளாண் துறை அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம், புதுவை அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், திருமுருகன், ஜான்குமாா், பேரவைத் துணைத் தலைவா் ராஜவேலு, புதுவை எம்.பி.க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், தமிழக எம்பிக்கள் விஷ்ணுபிரசாத், துரை. ரவிக்குமாா், புதுவை, தமிழக எம்எல்ஏ.க்கள், அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொள்கின்றனா்.
விழாவை தொடா்ந்து ஹோட்டல் அக்காா்டில் மதிய உணவுக்குப் பின் நிதின் கட்கரி, காா் மூலம் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்று, தனி விமானம் மூலம் புதுதில்லி திரும்புகிறாா். மத்திய அமைச்சா் வருகையையொட்டி புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினா் செய்துள்ளனா்.
