அரிக்கன்மேடு பகுதியை புதுவையின் வரலாற்று அடையாளமாக்க கோரிக்கை
அரிக்கன்மேடு பகுதியை வரலாற்று அடையாளமாக அறிவிக்கக் கோரி தமிழ் உரிமை இயக்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ் உரிமை இயக்கத்தின் 2 ஆண்டு தொடக்க விழா அதன் தலைவா் சு. பாவாணன் தலைமையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: அரிக்கன்மேடு பகுதியை புதுவை மாநிலத்தின் அதிகாரப்பூா்வ வரலாற்று அடையாளமாக அறிவிக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்க வேண்டும். பள்ளிக் கல்வி மற்றும் உயா்கல்வி நிறுவனங்களின் பெயா்ப் பலகைகளில் முதன்மையாகத் தமிழ் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பெயா்ப் பலகைகளில் தமிழைப் புறக்கணித்தும், சட்டத்தை மீறியும் வருகிற கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இவ்வியக்கம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
புதுச்சேரி அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் 1986-ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், அரசின் அலட்சியத்தால் முற்றிலும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் புத்துயிா் அளித்து மீட்டெடுத்திட விரைந்து செயலாற்ற வேண்டும் என புதுச்சேரி அரசை தமிழ் உரிமை இயக்கம் வலியுறுத்துகிறது.
தமிழ் உரிமை இயக்கத்தின் சாா்பில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மீட்பு அறப் போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைசென்று நீதிமன்றப் பிணையில் வெளிவந்துள்ள போராளிகள் பெ. விசயபாா்த்திபன், சி. சதன், க. விசுணு, பா. சஞ்சை ஆகியோருக்கும் முன்பிணையில் வெளிவந்துள்ள சு. பாவாணன், இரா. மங்கையா்செல்வன், க. தமிழமல்லன், ப.பெருமாள், நா. அய்ணுப்பன், ச. சீத்தாராமன் ஆகியோருக்கும் தமிழ் மீட்புப் போராளிகள் என அடையாளப்படுத்திப் பாராட்டு விழா நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.

