தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாயம்: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சாத்தனூா் அணையிலிருந்து உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளதால் தென் பெண்ணை ஆற்றில் வெள்ள அபாயம் குறித்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டது.
இது குறித்து புதுவை மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையத் தலைவரும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான அ. குலோத்துங்கன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பருவ மழையின் காரணமாக கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீா் மற்றும் சாத்தனூா் அணை நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக சாத்தனூா் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் குடியிருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், இந்த நேரத்தில் ஆற்றில் இறங்குவது, மீன் பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது போன்ற எவ் விதமான செயலிகளிலும் ஈடுபட வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

