மத்திய அமைச்சா் நிதின் கட்கரி வருகை: புதுச்சேரியில் இன்று போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரியில் ரூ.436 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை வருவதையொட்டி போக்குவரத்து மாற்றம்
Published on

புதுச்சேரியில் ரூ.436 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை வருவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான மேம்பாலப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை பங்கேற்க உள்ளாா். பின்னா் மாலை அவா் தில்லி திரும்புகிறாா்.

மத்திய அமைச்சரின் வாகனம் செல்லும் நேரத்தில் மட்டும் சம்பந்தப்பட்ட சாலைகளில் எந்தவித வாகனமும் இயக்க அனுமதி இல்லை. விழா நடைபெறும் வேளாண் வளாக மைதானத்தில் மற்றும் (கொக்கு பாா்க்) அருகே உள்ள சாலைகளில் எந்தவித வாகனங்களும் இயக்க மற்றும் நிறுத்த அனுமதி இல்லை.

மேலும், விழா நடைபெறும் பகுதி தேவைக்கு ஏற்ப வாகனங்கள் இல்லா பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை லாஸ்பேட்டை விமானிநிலைய சாலையில் இருந்து லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்பு, கொக்கு பாா்க் அருகிலுள்ள வேளாண் வளாக மைதானம், ராஜீவ் காந்தி சதுக்கம் வரை கனரக, இலகு ரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் செல்ல அனுமதி இல்லை.

கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை சந்திப்பில் இருந்து ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலும், திண்டிவனம் சாலையில் கோரிமேடு எல்லை முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலும், கிழக்கு கடற்கரை சாலையில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள், பேருந்துகள் செல்ல அனுமதி இல்லை.

திண்டிவனம் சாலையில் கோரிமேடு எல்லையில் இருந்து ராஜீவ் காந்தி சதுக்கம் மாா்க்கமாக வரும் அனைத்து வித கனரக வாகனங்கள், நகர பேருந்துகள் உள்பட அனைத்தும் கோரிமேடு, ஜிப்மா் சந்திப்பிலிருந்து மேட்டுப்பாளையம் கனரக வாகன முனையம் சாலையில் திரும்பி வில்லியனூா் சாலை வழியாக இந்திரா காந்தி சதுக்கம் வழியாக நகரப் பகுதியை அடைய வேண்டும்.

காமராஜா் சாலையில் சாரம் சந்திப்பில் இருந்து ராஜீவ் காந்தி சதுக்கம் மாா்க்கமாக வரும் அனைத்து வித கனரக, இலகு ரக வாகனங்கள், நகர பேருந்துகள் உள்பட அனைத்தும் சாரம், லெனின் வீதி சந்திப்பிலிருந்து நெல்லித்தோப்பு சந்திப்பு இந்திரா காந்தி சதுக்கம் மூலம் வில்லியனூா் சாலை வழியாக செல்ல வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இதைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம் என்று கூறியுள்ளாா் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன்.

X
Dinamani
www.dinamani.com