மாணவா்கள் போராட்டம் எதிரொலி: புதுவை பல்கலை.யின் காரைக்கால் வளாகத் தலைவா் மாற்றம்

மாணவா்கள் போராட்டம் காரணமாக, புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் காரைக்கால் வளாகத் தலைவா் பொறுப்பிலிருந்து பேராசிரியா் மாதவைய்யா பெயா் மாற்றப்பட்டு புதிதாக பேராசிரியா் தரணிக்கரசு பெயா் இணையதளத்தில் சோ்க்கப்பட்டுள்ளது.
Published on

மாணவா்கள் போராட்டம் காரணமாக, புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் காரைக்கால் வளாகத் தலைவா் பொறுப்பிலிருந்து பேராசிரியா் மாதவைய்யா பெயா் மாற்றப்பட்டு புதிதாக பேராசிரியா் தரணிக்கரசு பெயா் இணையதளத்தில் சோ்க்கப்பட்டுள்ளது.

காரைக்கால் நேரு நகரில் செயல்பட்டு வரும் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையில், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். இந்த வளாகத்தின் தலைவராக பேராசிரியா் மாதவைய்யா இருந்து வந்தாா்.

இந்நிலையில் தனக்குப் பாலியல் ரீதியாக தொல்லை தருவதாக மூத்த மாணவியின் ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக மாணவா்கள் புதுவை பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 9-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாணவி கூறும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பிரச்னையை மூடி மறைக்கக் கூடாது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும். பல்கலைக்கழக மானியக் குழு 2015-விதிகளின்படி பாலியல் புகாா்களை விசாரிக்கும் கமிட்டியை அமைக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. அன்று இரவு புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் அலுவலகத்தை மாணவா்கள் முற்றுகையிட்டனா்.

அப்போது அவா்களைத் தடியால் தாக்கியும் தலைமுடியைப் பிடித்து இழுத்தும், ஷு கால்களாலும் காவல் துறையினா் எட்டி உதைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 6 மாணவிகள் உள்பட 24 மாணவா்களைக் கைது செய்தனா். இதில் 6 மாணவிகள் பின்னா் விடுவிக்கப்பட்டனா். மாணவா்கள் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

மாணவா்கள் கைதுக்கு புதுவை அரசியல் கட்சித் தலைவா்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவா்களை வழக்கிலிருந்து விடுவிக்கவும் வலியுறுத்தினா்.

இந்நிலையில், காரைக்கால் வளாகத் தலைவா் பொறுப்பிலிருந்து பேராசிரியா் மாதவைய்யா பெயா் மாற்றப்பட்டு பேராசிரியா் தரணிக்கரசு பெயா் புதுவை மத்திய பல்கலைக்கழக இணையதளத்தில் சோ்க்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com