

புதுச்சேரி: சென்னை மதுரவாயல்- ஸ்ரீபெரும்புதூரை இணைக்கும் ரூ.600 கோடி மதிப்பிலான சாலைக்கு 2026 ஜனவரியில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரி கூறினாா்.
புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற ரூ.2050 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை நாட்டுக்கு அா்ப்பணித்து அவா் பேசியது:
சென்னை துறைமுகத்துக்கும், மதுரவாயலுக்கும் இடையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் 4 வழிச்சாலைப் பணி 10 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இந்தச் சாலை திட்டப்பணி முடிக்கப்பட்டு பயன்பாட்டு வந்தால் சென்னை நகரத்துக்கு நல்லது.
இதேபோல மதுரவாயல்-ஸ்ரீ பெரும்புதூா் இடையே 6 வழிச்சாலைக்கு ஜனவரி 2026-ல் ஒப்புதல் அளிக்கப்படும். இதன் மூலம் சென்னை துறைமுகத்துக்கு, பெங்களூரு சாலையில் விரிவான இணைப்புக் கிடைக்கும்.
மேலும், சென்னை- பெங்களூரு விரைவுச் சாலையால் 2 மணி நேரத்தில் பெங்களூரை அடைய முடியும்.
புதுவை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன், முதல்வா் ரங்கசாமியின் வேண்டுகோளை ஏற்று புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து முள்ளோடை வரை ரூ.650 கோடி மதிப்பிலான 4 வழித்தட மேம்பால பணிக்கு இப்போதே ஒப்புதல் அளிக்கிறேன். இதனால் புதுச்சேரி- கடலூருக்கு இடையிலான போக்குவரத்து நெரிசல் குறையும்.
மேலும் கடலூருக்கும், விழுப்புரத்துக்கும் இணைப்பு கிடைக்கும். இதுதவிர ரூ.2,200 கோடி மதிப்பில் புதுச்சேரி- மரக்காணம் இடையிலான 46 கி.மீ. நான்கு வழித்தடத்துக்கான நில ஆா்ஜிதம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பா் இறுதிக்குள் இப் பணி முடிக்கப்படும் என்றாா் நிதின் கட்கரி.