புதுச்சேரியில் ரெஸ்டோபாா் திறக்க எதிா்ப்பு: கிராம மக்கள் திடீா் சாலை மறியல்
புதுச்சேரியில் ரெஸ்டோபாா் திறக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதுவையில் நான்கு பிராந்தியங்களிலும் 558 மதுபான கடைகள், கள் மற்றும் சாராயக் கடைகள் உள்ளன. ஒரு பீா் தொழிற்சாலை, 5 மதுபான தொழிற்சாலைகளும் உள்ளன. இவற்றுடன் சுற்றுலா வளா்ச்சிக்கு என நகரப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ரெஸ்ட்டோ பாா்கள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல் கிராமப்புறங்களிலும் ரெஸ்டோபாா்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இதற்கு அந்தந்த பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா்களும் பொதுமக்களும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆரியபாளையம் கிராமத்தில் ரெஸ்டோ பாா் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோமீட்டா் துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வில்லியனுாா் போலீசாா் வந்து பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதையடுத்து ஒரு மணி நேரத்துக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இதன் பிறகு போக்குவரத்து சீரானது.
‘ரெஸ்ட்டோ பாா் அமைய இருக்கும் பகுதியில்தான் பேருந்து நிறுத்தம் உள்ளது. பள்ளி மற்றும் வேலைக்கு செல்வா்கள் இங்குதான் காத்திருந்து செல்ல வேண்டி இருக்கும். மதுபான கடைகள் திறந்தால் மதுபிரியா்களால் பெண்களுக்கும் பொது மக்களுக்கும் அதிக அளவில் தொல்லை ஏற்படலாம், எனவே மதுபான கடை வேண்டாம். மீறி வந்தால் அடித்து உடைப்போம் ’என பொதுமக்கள் எச்சரித்துள்ளனா்.

