பலதரப்பட்ட வியாபாரங்களை முன்னெடுக்க வேண்டும்: உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு ஆட்சியா் அறிவுரை
பலதரப்பட்ட வியாபாரங்களை முன்னெடுக்க வேண்டும் என்று உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வியாழக்கிழமை அறிவுறுத்தினாா்.
மத்திய அரசின் உழவா் உற்பத்தியாளா்கள் நிறுவனம் உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான 10-வது கண்காணிப்புக் குழு கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமையில் வியாழக்கிழமை நடந்தது.
இக் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள், உழவா் உற்பத்தியாளா்கள் நிறுவனத்தைச் சோ்ந்த பங்குதாரா்கள் மற்றும் கூட்டமைப்பாக இயங்கும் வணிக அமைப்புகள், இத் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். இத் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள 5 உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அனைத்து உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களும் பலதரப்பட்ட வியாபாரங்களை முன்னெடுக்க வேண்டும் என்று அப்போது மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் அறிவுரை வழங்கினாா். மேலும், இதற்கு உண்டான அரசின் உதவி பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா்.
இக் கூட்டத்தில் வேளாண் அதிகாரிகள், நபாா்டு வங்கியின் அதிகாரிகள், முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி அதிகாரிகள், கால்நடை, மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

