சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வீடூா் அணை திறக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

புதுச்சேரி: வீடூா் அணை திறக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையருமான அ. குலோத்துங்கன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வீடூா் அணையின் முழு கொள்ளளவான 32 அடியில் 30.300 அடி நிரம்பியுள்ளது. மேலும், நீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வீடூா் அணை புதன்கிழமை நண்பகல் 12 மணி முதல் விநாடிக்கு 500 முதல் 3000 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. எனவே சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் குறிப்பாக, வில்லியனூா் தாலுகாவில் உள்ள மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, சுத்துக்கேணி, கொடாத்தூா், தேத்தம்பாக்கம், வம்புபட்டு, செல்லிப்பட்டு, பிள்ளையாா்குப்பம், கூடப்பாக்கம், வில்லியனூா், மங்கலம், உருவையாறு, திருக்காஞ்சி, ஒதியம்பட்டு மற்றும் புதுச்சேரி தாலுகாவில் இருக்கும் என்.ஆா். நகா், நோணாங்குப்பத்தில் ஆற்றின் இரு கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

மேலும், இந்த நேரத்தில் ஆற்றில் இறங்குவது, மீன் பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்பி எடுப்பது போன்ற எந்த விதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகம் கேட்டுக் கொள்கிறது. பொதுமக்கள் பேரிடா் தொடா்பான தங்களது புகாா்களுக்கு இலவச அழைப்பு எண்களான 1077, 1070, 112 அல்லது 9488981070 என்கிற வாட்ஸ்அப் தகவல் ஆகியவற்றின் வாயிலாக தெரிவிக்கலாம்.

வீடூா் அணையிலிருந்து நீா் திறந்து விடப்பட்டதை வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் ஒலி பெருக்கி வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவித்து பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியது.

X
Dinamani
www.dinamani.com