ஜிப்மா் கிராம சுகாதார மையத்துக்குத் தேசிய தரநிலை சான்றிதழ்

ஜிப்மா் கிராம சுகாதார மையத்துக்குத் தேசிய தரநிலை சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
Published on

புதுச்சேரி: ஜிப்மா் கிராம சுகாதார மையத்துக்குத் தேசிய தரநிலை சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம் நாட்டில் உள்ள அரசு சுகாதார நிலையங்களின் செயல்பாட்டு திறன் மற்றும் தரத்தை மதிப்பிடுகிறது.

சேவை வழங்கும் திறன், நோயாளிகளின் உரிமைகள், மருத்துவ பராமரிப்பு உள்பட 8 அம்சங்களை மதிப்பீடு செய்து சான்று வழங்குகிறது. இந்த தேசிய அளவிலான சான்றிதழ் பெற்ற மையங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

புதுவை பத்துக்கண்ணு அடுத்த ராமநாதபுரம் கிராமத்தில் ஜிப்மா் நோய்தடுப்பு மற்றும் சமூக மருத்துவ துறையின் கீழ் ஜிப்மரின் கிராம சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு தற்போது தேசிய தரநிலை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தேசிய மதிப்பீட்டில் 91.05 % மதிப்பெண் பெற்று புதுவை மாநிலத்தில் இந்த தர சான்றிதழ் பெறும் முதல் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையமாக ஜிப்மரின் கிராமப்புற மையம் சிறப்பு பெற்றுள்ளது.

இந்தச் சாதனை குறித்து ஜிப்மா் இயக்குநா் வீா்சிங் நெகி, ஆரம்ப சுகாதார மையங்களில் ஜிப்மரின் தரம், நவீனத்துவத்தை இது எடுத்துக் காட்டுவதாகவும், இந்த மைல் கல்லை எட்டிய ஜிப்மரின் நோய்தடுப்பு மற்றும் சமூக மருத்துவ துறைக்கு பாராட்டும் தெரிவித்துள்ளாா் அவா்.

24 மணி நேரமும் செயல்படும் ராமநாதபுரம் ஜிப்மா் கிராம சுகாதார மையம் சுமாா் 11 ஆயிரத்து 200 மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. புதுவையை ஒட்டிய குருசுகுப்பம் நகா்ப்புற சுகாதார மையம் சுமாா் 9 ஆயிரம் மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. இந்த 2 மையங்களும் ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மையங்களாகச் செயல்பட்டு பல்வேறு ஆரம்ப சுகாதார மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com