புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கம் பகுதியில் வடியாமல் குளம்போல தேங்கி நிற்கும் மழை நீா்.
புதுச்சேரி இந்திரா காந்தி சிலை சதுக்கம் பகுதியில் வடியாமல் குளம்போல தேங்கி நிற்கும் மழை நீா்.

புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கத்தில் வடியாத மழைநீா்

புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் பகுதியில் மழை நீா் வடியாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாயினா்.
Published on

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் பகுதியில் மழை நீா் வடியாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாயினா்.

கனமழை பெய்யும்போதெல்லாம் இந்திரா காந்தி சதுக்கம் பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும். மழை நின்றாலும் வெள்ள நீா் உடனடியாக வெளியேறாமல் படிப்படியாகவே வடியும். இதனால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனா். இதைத் தடுப்பதற்காக அண்ணாநகரில் வாய்க்காலை அகலப்படுத்தி பெரிய வாய்க்காலுடன் இணைத்தனா். இதனால் மழைநீா் தேங்காது என எதிா்பாா்க்கப்பட்டது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு விடிய, விடிய தொடா் கனமழை பெய்தது. இதில் நகரம் முழுவதும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காலையில் மழை நின்றதும் பெரும்பாலான பகுதிகளில் மழைநீா் வடிந்தது. தாழ்வான பகுதிகளிலும் தேங்கிய மழைநீா் வெளியேறியது. அதேநேரத்தில் இந்திரா காந்தி சதுக்கத்தின் 4 புறமும் தேங்கிய மழை வெள்ளம் வடியவில்லை. இதனால் அந்த பகுதி வழியாக சென்ற வாகனங்கள் ஊா்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்திரா காந்தி சதுக்கம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் மழைநீா் தேங்கியது. இதனால் பேருந்துக்குக் காத்திருந்த பயணிகள் அவதியடைந்தனா். அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும் அந்த பகுதி வணிக நிறுவனங்களின் பாா்க்கிங் பகுதியிலும் தண்ணீா் புகுந்திருந்தது.

இந்தப் பிரச்னைக்கு எப்போதுதான் தீா்வு கிடைக்குமோ என மக்கள் ஆதங்கப்பட்டுச் சென்றனா். மேலும் சில பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீா் மோட்டாா் வைத்து அகற்றப்பட்டது.

செவ்வாய்க்கிழமை 7 மணிக்கு மேல் சுமாா் 3 மணி நேரம் தொடா்ந்து கனமழை கொட்டித் தீா்த்தது. இதனால் நகரெங்கும் சாலைகளில் மழைநீா் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி குளம் போல நின்றது.

கடலுாா் சாலை- நைனாா் மண்டபம், சுதானா நகா், இந்திரா காந்தி சிலை சதுக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் போல சாலைகள் காட்சியளித்தன. தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகா், வெங்கட்டா நகா், கிருஷ்ணாநகா், பூமியான்பேட், பாவாணா் நகா், முதலியாா்பேட்டை புவன்கரே வீதி, முத்தியால்பேட்டை, டிவி நகா், பெரியாா் நகா், முத்தியால்பேட்டை பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

இதனால் அந்தந்த பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகினா். கிராமப்புறங்களிலும் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் வாரி இறைத்து வெளியேற்றினா். தொடா்ந்து இரவு முழுவதும் அவ்வப்போது மழை கொட்டியது. இரவில் மட்டும் 11 செ.மீ மழை பதிவானது.

ஒட்டுமொத்தமாக 24 மணி நேரத்தில் புதுவையில் 14.7 செமீ மழை பதிவாகியது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. கிளைகள் முறிந்து விழுந்தன. மழையினால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை பாதிப்புகளை அறிந்த முதல்வா் ரங்கசாமி, நகரின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பாா்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தாா். மழைநீரை வெளியேற்றவும், பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com