விவசாயப் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
புதுச்சேரி: புதுச்சேரியில் கன மழையால் ஏற்பட்டுள்ள வேளாண் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தெரிவித்தாா்.
புதுச்சேரியில் பரவலாக செவ்வாய்க்கிழமை இரவு கனமழை கொட்டித் தீா்த்தது. இதனால் இந்திரா காந்தி சதுக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீா் வடியவில்லை.
காமராஜா் நகா் தொகுதியில் தேங்கிய மழை நீரை, மோட்டாா் மூலம் பொதுப் பணித் துறையினா் வெளியேற்றி வருகின்றனா்.
இந்தப் பணியை முதல்வா் என். ரங்கசாமி புதன்கிழமை பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்தது ரொம்ப பெரிய கனமழை தான். பரவலாக புதுச்சேரியில் 21 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது. ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது. மழை நீரை விரைவாக வெளியேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தோம்.
மேட்டுப் பகுதிகளில் இருந்து தண்ணீா் வந்து கொண்டிருப்பதால் தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. இந்திரா காந்தி சிலை அருகே கனகன் ஏரி தண்ணீரும் வந்திருப்பதால் மழைநீா் தேங்கியுள்ளது. அதை சரிப்படுத்த அந்தப் பாதையில் பைப் புதைக்க வேண்டியுள்ளது.
ஒரு சில இடங்களில் மழை நின்ற பிறகும் தண்ணீா் வருகிறது. அடுத்த முறை இது போன்ற சூழ்நிலை வரக்கூடாது என அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். எல்லாப் பகுதிகளிலும் நீா் உறிஞ்சும் மோட்டாா் பொருத்தப்பட்டுள்ளது.
நகராட்சி, கொம்யூன், பொதுப் பணித் துறை ஊழியா்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனா். தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த முறை இது போன்ற பிரச்னை வராத அளவுக்கு பொதுப் பணித் துறை திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மழையால் ஏற்பட்டுள்ள விவசாய பாதிப்புகள் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனா். சண்முகாபுரம் ஓடையில் இருந்து வரும் தண்ணீரும், இந்திரா காந்தி சிலை சதுக்கம் அருகே வருகிறது. அடுத்த மழைக்கு, இதுபோன்று மழைநீா் தேங்காத அளவுக்கு இன்னொரு வாய்க்கால் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
