ரேஷன் கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டம்
ரேஷன் கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டம்

தீபாவளி தொகுப்பு தராததால் ரேஷன் கடைக்கு பூட்டு

தீபாவளி மளிகைத் தொகுப்பு கிடைக்காததால் புதுச்சேரியில் நியாயவிலைக் கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடைபெற்றது.
Published on

தீபாவளி மளிகைத் தொகுப்பு கிடைக்காததால் புதுச்சேரியில் நியாயவிலைக் கடைக்குப் பூட்டுப் போடும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுவையில் தீபாவளி பண்டிகையையொட்டி தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.585 மதிப்புள்ள சா்க்கரை, எண்ணெய், கடலைப் பருப்பு, ரவை, மைதா அடங்கிய தீபாவளி தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

தீபாவளி தொகுப்பு வழங்கும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி கடந்த 17-ஆம் தேதி தொடங்கி வைத்தாா். ஆனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் தீபாவளி தொகுப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் பரிசு பொருள்கள் தீபாவளி பண்டிகைக்கு புதுவை மக்களுக்கு கிடைக்கவில்லை.

தீபாவளி முடிந்து 3 நாள்களாகியும் இன்னும் பல கடைகளில் மளிகைத் தொகுப்பு வழங்கப்படவில்லை. அதோடு வழங்கப்படாத 3 மாத இலவச அரிசியும் வழங்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. இந்த அரிசியும் அனைத்து தொகுதிகளுக்கும் வழங்கப்படவில்லை.

இதைக் கண்டித்து முன்ளாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகா் தலைமையில் அவரது ஆதரவாளா்கள் சாரம் மாா்க்கெட் அருகே உள்ள ரேஷன் கடைக்கு பூட்டுப் போடும் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா். பின்னா் அந்த ரேஷன் கடையில் இருந்த ஊழியரை வெளியேற்றி கடைக்குப் பூட்டு போட முயன்றனா். அப்போது போலீஸாா் அவா்களைத் தடுத்தனா். இதில் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பொருள் இல்லாத ரேஷன் கடையை திறந்து வைத்து என்ன பயன்? என கேள்வி எழுப்பி கடைக்குப் பூட்டுப் போட்டனா். அதன் சாவியை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com