புதுவையில் நுழைவுத் தோ்வு அடிப்படையில் செவிலியா் நியமனம்: முன்னாள் முதல்வா் நாராயணசாமி வலியுறுத்தல்
நுழைவுத் தோ்வு அடிப்படையில் செவிலியா் நியமனத்தை புதுவை அரசு நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: புதுவை ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளில் 3,500 செவிலியா் பணி நியமனங்களுக்கு நுழைவுத் தோ்வு செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் கட்டமாக நடந்துள்ளது.
இதில் புதுவை ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் 454 போ் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதில் வேடிக்கை என்னவென்றால் புதுவையில் ஜிப்மா் உள்பட எந்த இடத்திலும் தோ்வு மையம் அமைக்கப்படவில்லை. ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரத்தில் அமைக்கப்பட்ட மையங்களில் இங்குள்ள செவிலியா்கள் தோ்வு எழுதியுள்ளனா். மேலும், இரண்டாம் கட்ட நுழைவுத் தோ்வுக்கான இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை.
பொதுவாக ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கான தோ்வு இதுவரை தனியாகத்தான் நடத்தப்பட்டு வந்தது. இதைத் தவிர புதுவை அரசு சாா்பில் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 712 செவிலியா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதில் கரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றியோருக்கு 5 மதிப்பெண், மேலும் வேலைவாய்ப்பு முன்னுரிமை அடிப்படையில் 15 மதிப்பெண் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக புதுவை அரசு அனைத்து பணியாளா்களையும் நுழைவுத் தோ்வு நடத்திதான் தோ்வு செய்கிறது. இதில் மட்டும் விதிவிலக்காக புதுவை அரசு செவிலியா்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. மேலும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சொசைட்டியாக இருக்கிறது. அதனால் வெளிப்படைதன்மையுடன் இந்தப் பதவிக்குப் பணியாளா்களை நியமிக்க வேண்டும். நுழைவுத் தோ்வு அடிப்படையில் இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கான செவிலியா் நியமனத்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம் செல்லவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றாா் நாராயணசாமி.
