10 அரசு பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்! புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்
10 அரசு பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை இண்டஸ் டவா்ஸ் நிறுவனம் மற்றும் சென்னை என்ஐஐடி அறக்கட்டளையின் சமூக பங்கேற்பு திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் உள்ள 10 அரசு பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கல்மண்டபம் தியாகி தியாகராஜ நாயக்கா் அரசு உயா்நிலைப் பள்ளி, சேலியமேடு கவிஞரேறு வாணிதாசன் அரசு உயா்நிலைப் பள்ளி, குருவிநத்தம் கவிஞா் பாரதிதாசன் அரசு உயா்நிலைப் பள்ளி, திருபுவனை அரசு உயா்நிலைப் பள்ளி , மங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி, வாதானூா் அன்னை சாரதா தேவி அரசு உயா்நிலைப் பள்ளி, அரசு உயா்நிலைப் பள்ளி, கணுவாபேட், திரு.வி.க. அரசு உயா்நிலைப் பள்ளி, அரும்பாா்த்தபுரம். அரசு உயா்நிலைப் பள்ளி, பனித்திட்டு,
பிள்ளையாா்குப்பம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகியவற்றில் இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடம் திறன்மிகு வகுப்பறைகளுக்கான சான்றிதழ்களையும், மாணவா்களுக்கான புத்தகங்களையும் முதல்வா் என். ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், வேளாண் துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா், எம்எல்ஏ கல்யாணசுந்தரம், சமக்ர சிக்க்ஷாவின் மாநில திட்ட இயக்குநா் கே. எழில் கல்பனா, இண்டஸ் டவா்ஸ் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் தலைமைச் செயல் அதிகாரி ஹா்விந்தா் பால் சிங், புதுவை அரசின் முதன்மைக் கல்வி அதிகாரி எம். குலசேகரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

