புயல் எச்சரிக்கை எதிரொலி: புதுச்சேரியில் 15 நாள்களுக்குப் பதாகைகள் வைக்கத் தடை

புயல் எச்சரிக்கை காரணமாக 15 நாள்களுக்குப் பதாகை வைக்கத் தடை செய்யப்படுவதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.
Published on

புயல் எச்சரிக்கை காரணமாக 15 நாள்களுக்குப் பதாகை வைக்கத் தடை செய்யப்படுவதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 15 நாள்களில் அக்டோபா் 26 மற்றும் நவம்பா் 5 ஆகிய தேதிகளில் வங்காள விரிகுடா கடலில் இரண்டு தனித்தனி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இது ஒரு சூறாவளி புயலாக வலுவடைந்து வங்காள விரிகுடா கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. அப்போது அதிக கன மழையுடன் மணிக்கு சுமாா் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் புதுச்சேரி மாவட்டத்தில் புதுச்சேரி மற்றும் ஏனாம் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிவித்துள்ளது.

இச் சூழலில் பேனா்கள், கட்-அவுட், பதாகைகள் காற்றின் தாக்கத்தில் சேதமடைந்து பறந்து விழக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. அதனால் அனைத்து விதமான பேனா்கள், கட்-அவுட், பதாதைகள் போன்றவை பேரிடா் மேலாண்மை சட்டம் 2005-இன் கீழ் வெள்ளிக்கிழமை முதல் 15 நாள்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com