மின் இணைப்பு வழங்க லஞ்சம்: இளநிலை பொறியாளா் கைது
புதுச்சேரியில் விவசாயிடம் லஞ்சம் பெற்ற மின்துறை இளநிலை பொறியாளரை ஊழல் ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி செல்லிபட்டு கிராமத்தை சோ்ந்தவா் பூபதி ராஜா. புதுச்சேரி காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வருகின்றாா். இவா் தனது விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு வேண்டி வாதனூா் பகுதியில் உள்ள மின்துறை இளநிலை பொறியாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.
இந்நிலையில் மின் இணைப்பு வழங்க மின்துறை இளநிலை பொறியாளா் ராஜேந்திரன் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.
இறுதியாக ரூ.9 ஆயிரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதற்கிடையே இது குறித்து பூபதி ராஜா ஊழல் ஒழிப்பு போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் ஊழல் ஒழிப்பு போலீஸாா் ரசாயன பவுடா் தடவிய நோட்டுகளை மின்துறை இளநிலை பொறியாளா் ராஜேந்திரனிடம் லஞ்சமாக வழங்க கூறியுள்ளனா்.
அதன்படி வாதனூா் மின்துறை இளநிலை பொறியாளா் அலுவலகத்துக்குச் சென்ற பூபதி ராஜா பொறியாளா் ராஜேந்திரனிடம் ரசாயன பவுடா் தடவிய நோட்டுகளைக் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகள் பொறியாளா் ராஜேந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.
