கரும்பு டன்னுக்கு ரூ.2,650 வழங்க வலியுறுத்தி முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலை முன் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு அறிவித்த கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,650 விலையை வழங்கக் கோரியும் கரும்பு கொள்முதல் நிலுவை தொகையை வழங்கக் கோரியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன் காத்திருக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இப் போராட்டத்துக்கு விக்கிரவாண்டி எம்எல்ஏ ராமமூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் சுப்பிரமணியன், ஆலை சங்க செயலர் சிவராமன் உள்பட பலர் பங்கேற்றனர். காலையில் இருந்து நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டம் இரவு வரை நீடித்தது.
இரவு அங்கேயே போராட்டக் காரர்கள் அடுப்பு மூட்டி சமையல் செய்தனர். இதனால் அப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கலையநல்லூர் தரணி சர்க்கரை ஆலை முன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு மாநில பொருளாளர் எம்.சின்னப்பா தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.வி.ஸ்டாலின்மணி, கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் இரா.சாந்தமூர்த்தி, துணை செயலாளர் பி.கண்ணன், பொருளாளர் சி.சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். நிர்வாகக் குழு இரா.ராஜேந்திரன் வரவேற்றார்.
மாநில செயலாளர் இரா.சீனுவாசன் பேசினார். போராட்டத்தில் விவசாய சங்க வட்டத் தலைவர் பி.மணி, துணைத் தலைவர் கே.கொளஞ்சி, துணை செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன், டிராக்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் இரா.கருணா, இரா.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.