விழுப்புரத்தில், உலக போதைப் பொருள்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய பேரணியை வருவாய் கோட்டாட்சியர் அனுசுயாதேவி தொடங்கி வைத்தார். இப் பேரணியில் மது, கஞ்சா, அபின், பெத்தடின் உள்ளிட்ட போதைப் பொருள்களை உபயோகிப்பதால் உடலுக்கும், மனதுக்கும், சமுதாயத்துக்கும் ஏற்படும் சீர்கேடுகளை மாணவர்கள் வாயிலாக பிரசாரம் செய்தனர். இப் பேரணி விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் அருகே உள்ள சிக்னல் வரை சென்று முடிவடைந்தது.
பேரணியின்போது வழி நெடுகிலும் பொதுமக்களுக்கும், அந்த வழியாக சென்ற பேருந்துகளில் அமர்ந்திருந்த பயணிகளுக்கும் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்கள் விநியோகம் செய்தனர். இப் பேரணியில் விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏழுமலை பாலிடெக்னிக்கைச் சேர்ந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றறனர்.
போதைப்பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் பேரணியாகச் சென்றனர்.
இப் பேரணியில் கூடுதல் கண்காணிப்பாளர்(மதுவிலக்கு) பாண்டியராஜன், உதவி ஆணையர் (கலால்) க .ராஜு, மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு அலுவலர் சரவணக்குமார், கோட்டக் கலால் அலுவலர் கபார் ரையாஸ், மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.