Enable Javscript for better performance
நெருக்கடியில் திணறும்  திருக்கோவிலூர் பேருந்து நிலையம்!- Dinamani

சுடச்சுட

    

    நெருக்கடியில் திணறும்  திருக்கோவிலூர் பேருந்து நிலையம்!

    By  திருக்கோவிலூர்,  |   Published on : 27th March 2014 08:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருக்கோவிலூரில் போதிய இடவசதி இல்லாத பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, போதிய இடவசதி, அடிப்படை வசதிகளுடன், விரிவுபடுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
     திருக்கோவிலூர் நகரம், வர்த்தக மையமாகவும், வட்டாரத் தலைமையிடமாகவும் திகழ்கிறது. பிரசித்திப் பெற்று விளங்கும் உலகளந்த பெருமாள் கோயில், வீரட்டானேஸ்வரர் கோயில், ரகூத்தம சுவாமிகள் பிருந்தாவனம், ஞானானந்த தபோவனம், அதுல்ய நாதேஸ்வரர் கோயில், கபிலர் குன்று, அந்திலி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் மூலமாகவே அதிகளவில் வந்து செல்கின்றனர்.
     மேலும், பேருந்து நிலையத்தையொட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இங்கு வந்து செல்வதால் எந்நேரமும் கூட்டம் காணப்படும்.
     இந்நிலையில், பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எதிரெதிரே ஒரு சில வாகனங்கள் வந்து விட்டால், பேருந்துகள் நகர முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
     இப்பிரச்னையை தீர்க்க புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்டகால கனவு தொடர்ந்து பகல் கனவாகவே இருந்து வருகிறது. ஆனால் பேரூராட்சி நிர்வாகமோ தற்போதுள்ள பேருந்து நிலையத்தையே விரிவாக்கம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர தீர்மானித்துள்ளது.
     எனவே திருக்கோவிலூர் பேருந்து நிலையப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்பதை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் தங்கள் வாக்குறுதியாகக் கூறி, வெற்றி பெற்றதும் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai