Enable Javscript for better performance
ஆந்திர சம்பவம்: அரசியல் பின்னணி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- Dinamani

சுடச்சுட

  

  ஆந்திர சம்பவம்: அரசியல் பின்னணி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

  By கடலூர்/சிதம்பரம்  |   Published on : 17th April 2015 06:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆந்திரத்தில் அப்பாவித் தமிழர்கள் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு காவல் துறையினரால் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், அரசியல் பின்னணி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

   கடலூர் முதுநகர் மணிக்கூண்டில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் தொல்.திருமாவளவன் கொடி ஏற்றி வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  ஆந்திர சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி எனது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, அம்மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அரசியல் பின்னணி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

   இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் மத்திய அரசு மௌனமாக இருக்கிறது.

  நீதிவேந்தர் சுரேஷ் தலைமையிலான மனித உரிமை ஆர்வலர்களை ஆந்திர அரசு சம்பவ நடந்த இடத்திற்குள் அனுமதிக்காதது கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்.

   மேலும், தற்போது பணியிலுள்ள நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி ஒத்த கருத்துடைய தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து வரும் 28-ம் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடக்க உள்ளது.

  கூண்டுகளை அகற்ற வேண்டும்: தமிழகத்தில் அம்பேத்கர் சிலைகளுக்கு அமைக்கப்பட்ட இரும்புக் கூண்டுகளை அகற்ற வேண்டும்.

   தருமபுரியில் தலித் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தவர்கள் மற்றும் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

  சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறி: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.

    முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 8 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளன. போதிய கட்டமைப்பு வசதி இல்லாததாலும், தரமான மருந்துகள் பயன்படுத்தாததாலும் குழந்தைகள் இறந்துள்ளன. இதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

   சிதம்பரம் நடராஜர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நகரில் மிக மோசமாக உள்ள சாலைகளை 2 வாரத்துக்குள் மேம்படுத்த வேண்டும்.

   தமிழகத்தில் உள்ள அரசு கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்கள் எந்த அளவுக்கு உறுதி தன்மையுடன் உள்ளன என்பதை கண்டறிய தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

  அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்தடைந்தும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. ஒப்பந்தப் பணியாளர்கள் நிரத்தரம் செய்யப்படவில்லை. பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.

  மாவட்ட துணைச்செயலர் ஸ்ரீதர், செய்தி தொடர்பாளர் ஏகா.ஆதவன், கடலூர் தெற்கு மாவட்டச் செயலர் வ.க.செல்லப்பன், கிழக்கு மாவட்டச் செயலர் பா.தாமரைச்செல்வன், நகர்மன்ற உறுப்பினர் பெரு.திருவரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai