Enable Javscript for better performance
பாஸ்போர்ட் வழங்கும் சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரத்தில் பாஸ்போர்ட் சேவை வழங்கும் சிறப்பு முகாம் வரும் ஏப்ரல் 18, 19 ஆகிய 2 நாள்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்றன.

     இது குறித்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட அளவிலும் அதற்கு கீழான நகரங்களிலும் பாஸ்போர்ட் சேவையை விரிவுபடுத்த சிறப்பு பாஸ்போர்ட் முகாம்கள் அமைத்து சேவை வழங்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

     அதன் அடிப்படையில் வரும் ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளன.

     பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இணையதளம் வாயிலாக பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முடிவுகள் விரைவாக எடுக்கப்படும்.

      இம் முகாமில் பங்கேற்பவர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தட்கல் விண்ணப்பங்கள் மற்றும் காவல்துறை போலீஸ் சரிபார்ப்பு சான்றுகளுக்கான விண்ணப்பங்கள் இம் முகாமில் பரிசீலிக்கப்பட மாட்டாது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பப் பதிவு எண் (ஏ.ஆர்.என்) உருவாக்கி தகுந்த கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்தி, விண்ணப்பப் பரிசீலனை நேர்காணலுக்கான நேரத்தை தேர்வு செய்து அதன் பிறகே இந்த சிறப்பு முகாமில் பங்கேற்கலாம்.

     இந்த சிறப்பு முகாமிற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் இணைய தளத்தின் மூலம் ஏற்கப்படுகின்றன.

    அப்படி பங்கேற்கும்போது ஏ.ஆர்.என். பக்கத்தின் பிரிண்ட் அவுட் இரண்டு பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள் மற்றும் தேவையான ஆவணங்களின் உண்மை சான்றுகளையும் அவற்றில் சுய கையொப்பமிட்ட நகல்கள் ஆகியவற்றுடன் வர வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் புகைப்படம் எடுத்தல், அவர்களின் கைரேகைகளை பதிவு செய்தல், சான்றுகளை கணினியில் பதிவேற்றம் செய்தல், அவற்றை சரிபார்த்தல் போன்றவை இந்த சிறப்பு முகாமில் நடைபெறும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூலமாக பாஸ்போர்ட் அனுப்பி வைக்கப்படும்.

    விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள நபர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai