Enable Javscript for better performance
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில்  மேலும் 4 குழந்தைகள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில்  மேலும் 4 குழந்தைகள் சாவு

    By விழுப்புரம்  |   Published on : 17th April 2015 06:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பச்சிளம் குழந்தைகள் புதன்கிழமை இரவு, வியாழக்கிழமை காலை அடுத்தடுத்து உயரிழந்தன. இதையடுத்து இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

     விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தினமும் இங்குவந்து சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள்.

     இங்கு பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படிருந்த சீர்ப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த முனியன்-கோவிந்தம்மாள் தம்பதியரின் 4 நாள் ஆன ஆண் குழந்தை, ஏமப்பேரைச் சேர்ந்த ராகேஷ்-பார்வதி தம்பதியரின் 2 நாள் ஆன ஆண் குழந்தை, கெங்கராயநல்லூரைச் சேர்ந்த இளையராஜா-கலா தம்பதியரின் ஆண் குழந்தை, உளுந்தூர்பேட்டை ஜனார்த்தனன்-இந்திரலேகா தம்பதியின் பெண் குழந்தை ஆகியவை புதன்கிழமை அதிகாலையில் அடுத்தடுத்து உயிரிழந்தன.

     இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து மருத்துவக் குழுவினர் இந்த மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்தனர்.

     இந்நிலையில் இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கராபுரம் கடம்பூரைச் சேர்ந்த பரத்-ரேவதி தம்பதியரின் 12 நாள் ஆன ஆண் குழந்தை புதன்கிழமை மாலை உயிரிழந்தது. சாலாம்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்-ரம்யா தம்பதியரின் 17 நாள் ஆன ஆண் குழந்தை புதன்கிழமை இரவு 10 மணி அளவில் உயிரிழந்தது.

     கடலூர் மாவட்டம், விருத்தசாலத்தை அடுத்த தொட்டில்மேட்டைச் சேர்ந்த சிவசக்தி-முருகன் தம்பதியரின் 4 நாள் ஆன பெண் குழந்தை அன்றிரவு 11 மணியளவில் இறந்தது. இந்த மூன்று குழந்தைகளும் குறை பிரசவத்தில் எடை குறைவாகவும், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

     இந்நிலையில் உளுந்தூர்பேட்டைச் சேர்ந்த அன்பு என்பவர் புதன்கிழமை தனது பெண் குழந்தையை உடல்நிலை சரியில்லை என்று சேர்த்துள்ளார். அவரது குழந்தையும் வியாழக்கிழமை காலை இறந்து விட்டதாகத் தெரிகிறது. இந்தத் தகவலை மருத்துவமனை ஊழியர்கள் சிலர் அன்புவிடம் தெரிவித்துள்ளனர்.

     இதுகுறித்து அன்புவிடம் கேட்டபோது, எனது குழந்தைக்கு இதயத்துடிப்பு குறைவாக இருந்தது. அதனால் மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன். இங்குள்ள மருத்துவர்கள், குழந்தைக்கு இதயத்துடிப்பு மிகவும் குறைவாக உள்ளது. காப்பாற்றுவது கடினம். நாங்கள் முடிந்தவரை முயற்சி செய்கிறோம் என்றனர். காலையில் இங்குள்ள ஊழியர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறினர் என்றார்.

     முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரு நாள்களில் அடுத்தடுத்து 8 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai