Enable Javscript for better performance
அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கரின் 125வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

    விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே  உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக சார்பில், மாவட்டச் செயலாளர் இரா.லட்சுமணன் எம்.பி. தலைமையில், கட்சியின் வேட்பாளர் சி.வி.சண்முகம் எம்எல்ஏ, மாவட்ட இளைஞரணிச் செயலர் ஆர்.பசுபதி, நகரச் செயலர் ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

      திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் ராதாமணி தலைமையில், திருக்கோவிலூர் வேட்பாளர் க.பொன்முடி, வானூர் வேட்பாளர் மைதிலி ராஜேந்திரன், கூட்டணிக் கட்சி விழுப்புரம் வேட்பாளர் அமீர்அப்பாஸ் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மக்கள் நலக் கூட்டணி சார்பில், தமாகா மாவட்டத் தலைவர் வி.தசரதன் தலைமையில், நகரத் தலைவர் ஹரிபாபு உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

    தேமுதிக சார்பில் நகரச் செயலர் பாபு, கேப்டன் மன்ற துணைச் செயலர் ராஜசந்திரசேகர் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

     விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, நகர நிர்வாகிகள் இரணியன், சோமு, மதிமுக நகரச் செயலர் ஜானகிராஜா உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தனர்.  பாஜக சார்பில், விழுப்புரம் வேட்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.

    திருக்கோவிலூர்

     திருக்கோவிலூரில் அரசு மருத்துவமனை முன் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, திமுக சார்பில் திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளரும், மாவட்டச் செயலருமான க.பொன்முடி தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி சார்பில் தேமுதிக மாவட்ட துணைச் செயலர் கே.உமாசங்கர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.  பாமக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாவட்டத் தலைவர் பால.சக்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    செஞ்சி

    மக்கள் நலக் கூட்டணி சார்பில் செஞ்சி கூட்டுச் சாலையில் அமைக்கப்பட்ட அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மதிமுக மாவட்டச் செயலர் ஏ.கே.மணி, மார்க்சிஸ்ட் வட்டத் தலைவர் கோவிந்தசாமி, தேமுதிக நகரச் செயலர் ஆனந்தன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் வெற்றிச்செல்வன், தமாகா மாநில பொதுக்குழு தலைவர் கோபிநாத், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

     திமுக சார்பில் மாவட்டச் செயலரும், செஞ்சி வேட்பாளருமான செஞ்சிமஸ்தான் அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நகர செயலர் காஜாநஜீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     காங்கிரஸ் சார்பில் மாவட்ட பொதுச்செயலர் பழனிவேல் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். செஞ்சி பாஜக வேட்பாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் அம்பேத்கர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அவலூர்பேட்டை

    அவலூர்பேட்டை காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்துக்கு தேமுதிக, தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் அ.பிரபு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் க.அழகுவேலுபாபு எம்.எல்.ஏ. நகர்மன்றத் தலைவர் கோ.பாலகிருஷ்ணன், நகரச் செயலாளர் எம்.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai