போலி ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருட்டு: சர்வதேச கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர் கைது

போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடிய வழக்கில், சர்வதேச கும்பலைச் சேர்ந்த முக்கிய நபரை விழுப்புரம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடிய வழக்கில், சர்வதேச கும்பலைச் சேர்ந்த முக்கிய நபரை விழுப்புரம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்த பணம் கடந்த சில மாதங்களில் நூதன முறையில் திருடப்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

மேலும், விழுப்புரம் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் கிளை மேலாளர் சாமிநாதன், தங்கள் வங்கியின் இரண்டு ஏடிஎம் மையங்களில், ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி, போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து வாடிக்கையாளர்களின் ரூ.3.25 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளதாக கடந்த மார்ச் மாதம் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதுதொடர்பாக கடந்த மே மாதம் திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணன், வீரமணி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது, போலி ஏடிஎம் கார்டு தயாரித்து, ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி, பணம் திருடியதும், தமிழகம் மட்டுமின்றி மலேசியா, இலங்கை நாடுகளில் உள்ள கும்பலுக்கும் இதில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, விழுப்புரம் டிஎஸ்பி வீமராஜ், உதவி ஆய்வாளர்கள் அண்ணாதுரை, ஹரிஹரசுதன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி சென்னை வியாசர்பாடி நூர்முகமது, கோவை உக்கடம் ரசூல்மைதீன், அவரது தம்பி ராஜாரபீக், செஞ்சி ஜெயராமன், புதுக்கோட்டை பாஸ்கர், திருச்சி இப்ராஹிம், கேரள மாநிலம் பாலக்காடு முஜிபுர் ரகுமான், போத்தனூர் அப்துல்லா, ராமநாதபுரம் சையது அபுதாகீர், இலங்கையைச் சேர்ந்த முகமது சுஜான் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் பணம், சொகுசுக் கார்கள், செல்லிடப்பேசிகள், போலி ஏடிஎம் கார்டு தயாரிக்கும் இயந்திரங்கள், ஏடிஎம் ஸ்வைப் கருவிகள், போலி ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்தக் கும்பலுக்குத் தலைவரான கோவையைச் சேர்ந்த அப்துல் அஜீஸ், இலங்கையைச் சேர்ந்த விவேகானந்த பிரசன்னா உள்ளிட்டோரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், அப்துல்அஜீஸுக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்த சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அடுத்த மல்லிப்பட்டைச் சேர்ந்த பகீர்மஸ்தான் மகன் சிக்கந்தரை (55), விழுப்புரம் தனிப்படை போலீஸார் சனிக்கிழமை காலை கைது செய்தனர்.

சிவகங்கையிலிருந்து பெங்களூருவுக்கு காரில் தப்ப முயன்றபோது, விழுப்புரம் புறவழிச் சாலையில், செஞ்சி சாலை சந்திப்புப் பகுதியில் போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

இவர் போலி ஏடிஎம் கார்டுகள், ஸ்கிம்மர் கருவிகளை அப்துல் அஜீஸிடமிருந்து வாங்கி, திருட்டு கும்பலுக்கு விநியோகம் செய்து பணம் வாங்கிக்கொடுக்கும் வேலையை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

சிக்கந்தரை கைது செய்த குற்றப்பிரிவு போலீஸார், அவரிடமிருந்து கார், செல்லிடப்பேசி, மடிக்கணினி, போலி ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை விழுப்புரம் நீதிமன்றத்தில் மாலை ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com