Enable Javscript for better performance
வாட்டி வதைக்கும் குளிர்! "ஸ்வட்டர்' விற்பனை அமோகம்- Dinamani

சுடச்சுட

    

    வாட்டி வதைக்கும் குளிர்! "ஸ்வட்டர்' விற்பனை அமோகம்

    By நமது நிருபர், விழுப்புரம்  |   Published on : 28th November 2016 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sale

    விழுப்புரத்தில் குளிர் வாட்டி வதைப்பதால் ஸ்வட்டர், கம்பளிப் போர்வை உள்ளிட்டவைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
     தமிழகத்துக்கு அதிக மழையைத் தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால், ஜனவரியில் தொடங்கும் பனிக் காலம் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. இதனால் கடுங் குளிர் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.

    மேலும், குளிரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இரவு நேரத்தில் வெப்பநிலை குறைவதால் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினருமே குளிரால் அவதிப்படுகின்றனர்.

    அதிகாலையில் பணிக்குச் செல்கிறவர்கள், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், நடை பயிற்சி மேற்கொள்வோர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    தமிழகத்தில் ஜவுளிக் கடைகள், நடை பாதை கடைகள் என எங்கும் ஸ்வட்டர், கம்பளிப் போர்வை, தலைக் குல்லா உள்ளிட்டவைகளின் வியாபாரம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    விழுப்புரம் காந்தி சிலை அருகே சாலையோரம் வைத்து விற்பனை செய்யப்படும் ஸ்வட்டர், கம்பளிப் போர்வை உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

    கடந்த ஆண்டு அதிக மழைப் பொழிவு இருந்ததால், விற்பனை மந்தமாக இருந்ததாகக் கூறும் வியாபாரிகள், இந்த ஆண்டு முன்கூட்டியே குளிர் தொடங்கிவிட்டதால் அதிக அளவில் விற்பனை ஆவதாகத் தெரிவித்தனர்.

    விழுப்புரத்தில் ஸ்வட்டர் ரூ. 150 தொடங்கி ரூ. 450 வரையிலும், தலையில் கட்டும் ஸ்கார்ஃப் ரூ. 35, ரூ. 40 விலையிலும், சால்வை ரூ. 250 முதல் ரூ. 400 வரையிலும், போர்வை ரூ. 300 முதல் 700 வரையும் அளவுக்கு ஏற்ப, துணியின் தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.

    விழுப்புரம் காந்தி சிலை அருகே சாலையோரம் ஸ்வட்டர் விற்பனை செய்யும் நேபாளத்தைச் சேர்ந்த வியாபாரிகள், கடந்த 10 ஆண்டுகளாக வந்து விற்பனை செய்வதாகவும் அதனால், தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.

    குளிரைச் சமாளிக்க...: குளிர் காலத்தில் உடல் வெப்பநிலை சராசரியைவிட குறைவதால் உடல் நடுக்கம், உதடு வெடிப்பு, சளித் தொல்லை, சருமப் பிரச்னைகள் ஏற்படும். இரவு நேரத்தில் ஜன்னல், கதவுகளை அடைத்து வைத்து தூங்குவது நல்லது.

    குளிரைத் தாங்கும் ஆடைகளை அணிவது, அதிகாலை வெளியே செல்பர்கள், பைக், பேருந்துகளில் பயணிப்பவர்கள் காதுகளில் பனி உள்ளே புகாதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர் வேல்முருகன் கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai