Enable Javscript for better performance
ஓட்டுநர் கொலை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    கார் ஓட்டுநரை கொலை செய்து, காரைத் திருடிச் சென்ற வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி 3-ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து.
    விழுப்புரம், வி.மருதூரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் துரை (45). இவர் விழுப்புரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் காரை வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். கடந்த 4.2.2011-அன்று இளைஞர்கள் 3 பேர் வேப்பூரில் நடைபெறும் திருமணத்துக்குச் செல்ல வேண்டும் என்று கூறி காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
    மறுநாள் வரை கார் நிலையத்துக்கு வராததால், சந்தேகமடைந்து, அவரது வீட்டில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அங்கும் அவர் வராததால் பல இடங்களில் தேடினர்.
    இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எடைக்கல் காப்புக்காடு பகுதியில் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாகத் தகவல் கிடைத்து, அங்கு சென்று பார்த்தபோது, கார் ஓட்டுநர் துரை என்பது தெரிய வந்தது.
    இது குறித்து 5.2.11-அன்று எடைக்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, கொலையாளிகளைப் போலீஸார் தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தக் கொலையில் தொடர்புடைய கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த சின்னகென்னடியான்குப்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜதுரை உள்ளிட்ட மூவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது, கார் ஓட்டுநரை கொலை செய்து, காரை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்கள் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
    கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சிறார் என்பதால் விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. ராஜதுரை மீதான வழக்கு கள்ளக்குறிச்சி 3-ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட்புஷ்பா குற்றம் சாட்டப்பட்ட ராஜதுரைக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 302 பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai