Enable Javscript for better performance
கணினி மயமாகும் நியாயவிலை கடைகள்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது.
    தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து குடும்பத்தினருக்கும் இனி ஏமாற்றமின்றி உரிய பொருள்களை வழங்க, புதிய செயலியுடன் கூடிய கையடக்க மின்னணு கருவியை அறிமுகம் செய்து விற்பனையை முறைப்படுத்தியுள்ளனர்.
    குடும்ப அட்டைக்கு விடை: தமிழகத்தில் நீண்டகாலமாக புழக்கத்திலுள்ள காகித வடிவிலான குடும்ப அட்டைகளுக்கு விடை கொடுத்து, மின்னணு வகையிலான ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் நியாயவிலைக் கடைகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றன.
    போலி குடும்ப அட்டைகளைத் தடுக்கவும், நியாயமான குடும்ப அட்டைகளுக்கு உரிய, தேவையான பொருள்களை வழங்கவும் ஸ்மார்ட் அட்டை திட்டத்தை அரசு ஏற்படுத்தியது. இதற்காக, ஸ்மார்ட் அட்டைகள் தயாரிக்கும் பணியினையும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தொடங்கியுள்ளது.
    கையடக்க மின்னணு கருவி அறிமுகம்: குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதற்காக அடுத்த கட்டமாக மின்னணு இயந்திரத்தில் பதிவு செய்து, இணையதளம் வாயிலாக, பொருள் இருப்பு, விற்பனையை மேற்கொள்ள இந்த கையடக்க கருவியை அறிமுகம் செய்துள்ளது. விற்பனை முனையத்துக்கான (பாயிண்ட் ஆப் சேல்) மின்னணு கருவிகளை நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைக்கான புதிய செயலியை, குடிமைப் பொருள் வழங்கல் துறை அறிமுகம் செய்து, அதற்கான கையடக்க கருவியினையும் வழங்கியுள்ளது.
    செல்லிடப்பேசி இணைப்பு: வானொலிப் பெட்டி அளவில் வழங்கப்பட்டுள்ள கருவியின் முகப்பில், ஸ்கேன் செய்யும் பகுதியும், அதன் கீழ் நடவடிக்கைகளைக் காட்சிப்படுத்தும் திரைப் பகுதியும் உள்ளது. இதனை இயக்க பட்டன்களும் வழங்கப்பட்டுள்ளன.
    செல்லிடப்பேசி சிம்கார்டு பொருத்திய, இணையதள இணைப்புடன் வழங்கப்பட்டுள்ள இக்கருவியில், 1. பொருள் விற்பனை, 2. குடும்ப அட்டை பதிவு, 3. பொருள் இருப்பு கண்காணித்தல், 4. பரிவர்த்தனைகள், 5. விற்பனை நிறைவு, 6. இதர விவரங்கள் ஆகிய தலைப்புகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
    குடும்ப அட்டைப் பதிவு: ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளில் உள்ள மொத்த குடும்பதாரர்களின் அட்டைகள் முதலில் பதியப்படுகிறது. கடை குறியீடு எண், குடும்ப அட்டையின் வரிசை எண், வறுமைக் கோட்டின் கீழ் பயன்பெறுவோர் பற்றிய தகவல், வனத்துறை, காவல் துறை, தீயணைப்புத் துறையினரின் அட்டை, பொருள்கள் அளிக்கப்படாத அட்டை உள்ளிட்ட தகவல்கள் பதியப்படும்.
    போலி அட்டைகளுக்கான முறைகேடுகளைத் தடுக்க, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, அவர்களது ஆதார் எண்களும், 5 வயதுக்குள்பட்டவர்களின் பிறந்த நாளும், இதனுடன் சிலிண்டர் எண்ணிக்கை தகவல், செல்லிடப்பேசி எண் ஆகியவை பதியப்படுகிறது.
    குடும்ப அட்டை எண்ணைப் பதிவு செய்துவிட்டு, அக்குடும்பத்தினரின் ஆதார் அட்டைகளை இயந்திரத்தின் மேல் பகுதி உள்ள ஸ்கேனரில் காண்பித்தவுடன் தானாகவே பதியப்பட்டு, குடும்ப அட்டையின் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. இப்பணி முடிந்ததும், குடும்ப அட்டைதாரர் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் கிடைக்கிறது.
    பொருள் விற்பனை: உதாரணமாக அட்டைதாரருக்கு வழங்கப்படும் புழுங்கல் அரிசி 20 கி, பச்சரிசி 20 கி, கோதுமை 10 கி, மண்ணெண்ணெய் 3 லி. அளவும் பதியப்பட்டுள்ளதால், பொருள் வாங்க வருவோரின் அட்டை எண்ணை டைப் செய்தவுடன் அந்த அட்டைக்கான வழங்கல் அளவு திரையில் தோன்றும். பதியாத, தவறான அட்டை என்றால், இல்லை என்று நிராகரிக்கும். பொருளின் உரிய அளவு, அட்டைதாரர் வாங்கிய அளவு, மீதம் வாங்க வேண்டிய அளவையும் தெரிவிக்கும். உரிய பொருளை வழங்கியவுடன் வழங்கப்பட்ட பொருளின் அளவு, விலையைத் தெரிவித்து, பதிவு செய்து கொள்ளும். அட்டைதாரருக்கு பொருள்கள் வழங்கிய பின், விற்பனை நிறைவு பட்டனை அழுத்தியவுடன் வழங்கப்பட தகவல்கள் குடும்ப அட்டைதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாகப் போய்ச் சேரும்.
    மேலும், குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்ட பொருள்கள் நிலவரம், விற்பனை பட்டியல், விலை, தேதி போன்ற தகவல்களைத் தெரிந்துகொண்டு சரிபார்க்க முடியும்.
    அதேபோல் கடைக்கு வந்த பொருள்களின் வரவு, இருப்பு நிலவரம், பொருள்கள் முன்வரவு ஆகிய தகவல்களையும் தெரிந்துகொண்டு, பொருளின் இருப்பை வைத்து விற்பனையை மேற்கொள்ளலாம். போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்படும்: இத்திட்டத்தின் மூலம், போலி குடும்ப அட்டைகள் ஒழிக்கப்பட்டும். தவறான முறையில் பொருள்கள் வழங்கப்படுவதும் தடுக்கப்படும். மேலும் அட்டைதாரருக்கு உரிய அளவிலான பொருளை வழங்க முடியும். தவறாக வழங்கினால், குறுந்தகவல் காட்டிக் கொடுத்துவிடும்.
    ஜனவரி முதல் பயன்பாடு: இது குறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும், இந்த இயந்திரம் வழங்கப்பட்டு, விற்பனையாளருக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. தற்போது குடும்ப அட்டை பதியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல், பிற மாவட்டங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்துக்குள் இப்பணிகள் முடிக்கப்பட்டு, அக்டோபர் முதல் பரிட்சார்த்த முறையில் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் அட்டைப் பணிகள் முடிந்து, வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai