Enable Javscript for better performance
கண்ணை மூடிக்கொண்ட கண்காணிப்பு கேமராக்கள்: விழுப்புரத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கண்ணை மூடிக்கொண்ட கண்காணிப்பு கேமராக்கள்: விழுப்புரத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 05:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் நகரில் கொலை, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கண்காணிப்புக்காக பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளது.
    விழுப்புரத்துக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.
    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 18 லட்சம் செலவில் விழுப்புரம் நகரில் குற்றச் சம்பவங்களைக் கண்காணிப்பதற்காக நான்குமுனை சந்திப்பு, நேருஜி சாலை, பழைய பேருந்து நிலையம், கே.கே.சாலை சிக்னல், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
    இவை 24 மணி நேரமும் கண்காணிக்கும் நிலையில் இல்லை. பழுதடைந்தும், பராமரிப்பு இன்றியும் காட்சிப் பொருளாகக் கிடக்கின்றன.
    விழுப்புரம் நகரக் காவல் நிலைய முதல் தளத்தில், இந்த கேமராக்களின் செயல்பாடுகளைத் திரையில் காட்டும் பெரிய கண்காணிப்புத் திரையும் காட்சிப் பொருளாக மாறியுள்ளது.
    நகரின் குற்றச் சம்பவங்களைக் கண்காணிக்க வேண்டிய இந்த கேமராக்கள், கண்ணை மூடிக் கொண்டதால், குற்றச் சம்பவங்களை நிகழ்த்திவிட்டு குற்றவாளிகள் எளிதாகத் தப்பிச் செல்வதும், அச்சமின்றி நகரிலேயே நடமாடுவதும் சர்வசாதாரணமாகி விட்டது.
    கடந்த 2 ஆண்டுகளில் விழுப்புரம் நகரில் 5-க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
    சென்னையில் மென்பொறியாளர் சுவாதி, ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
    கேமராக்கள் புதிதாக பொருத்துவது இருக்கட்டும், விழுப்புரம் நகரில் பயன்பாட்டில் இருந்து, பழுதடைந்த கேமராக்களைக்கூட சீரமைக்கவில்லை. எனவே, குற்றச் சம்பவங்களைக் கண்காணிக்காவும், தடுக்கவும், விசாரணைக்கும் பெரிதும் உதவக்கூடிய கேமராக்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொருத்த வேண்டும்.
    குறிப்பாக ரயில் நிலையம், பேருந்து நிலையம், பெரிய மால்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். அப்போதுதான் குற்றச் சம்பவங்களைக் குறைக்க முடியும். கேமராக்கள் பொருத்தும் விஷயத்தில் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai