Enable Javscript for better performance
ரௌடி கொலை வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் 6 பேர் சரண்; 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ரௌடி கொலை வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் 6 பேர் சரண்; 5 பேர் கைது

    By DIN  |   Published on : 08th October 2016 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் வெடிகுண்டு வீசி ரௌடி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர். மேலும், 5 பேரை தனிப் படை போலீஸார் கைது செய்தனர்.
    விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த ரௌடி ஜனா (எ) ஜனார்த்தனன் (32). இவர், கடந்த 4ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு, பைக்கில் விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்மக் கும்பல் ஜனார்த்தனன் மீது நாட்டு வெடிகுண்டை வீசியதுடன், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது. இச்சம்பவம் குறித்து விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
    எஸ்.பி. நரேந்திரன் நாயர் உத்தரவின் பேரில் டிஎஸ்பிக்கள் வீமராஜ், வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட 5 தனிப்படையினர், குற்றவாளிகளை தேடி வந்தனர். வியாழக்கிழமை புதுச்சேரியைச் சேர்ந்த 5 பேரை பிடித்து தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், புழல் சிறையில் உள்ள ரௌடி ராஜ்குமாரின் கூட்டாளியான குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த டான் (எ) திருநாவுக்கரசு உள்ளிட்ட சிலரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், ஜனார்த்தனன் கொலை தொடர்பாக, வெள்ளிக்கிழமை காலை விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் டான் (எ) திருநாவுக்கரசு (24), குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த மூவர், பொம்மையார்பாளையம் மற்றும் புதுச்சேரி சேதுராப்பட்டைச் சேர்ந்த இருவர் என 6 பேர் நீதிபதி விக்னேஷ் பிரபு முன் சரணடைந்தனர்.
    இதையடுத்து, திருநாவுக்கரசு கடலூர் மத்திய சிறையிலும், மற்ற 5 பேர் செஞ்சி சீர்திருத்தப்பள்ளியிலும் வருகிற 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
    5 பேர் கைது
    ஜனார்த்தனன் கொலை வழக்கு தொடர்பாக, புதுச்சேரி அரியங்குப்பத்தைச் சேர்ந்த அஸ்வின் (28), முதலியார் சாவடியைச் சேர்ந்த விக்னேஸ்வர் (27)ஆகிய இருவரையும் தனிப்படையினர் வெள்ளிக்கிழமை காலை கைது செய்தனர்.
    இவர்கள் தனது கூட்டாளிகளான குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, குண்டுபிரகாஷ், சரவணன், பாஸ்கர் உள்ளிட்டோருடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் ஜனார்த்தனனைக் கொலை செய்தது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
    இதையடுத்து, திருவக்கரை பகுதியில் மறைந்திருந்த புதுச்சேரியைச் சேர்ந்த குண்டு பிரகாஷ் (25), சரவணன் (25), பாஸ்கர் (23) ஆகியோரை போலீஸார் கைது செய்தர்.
    ரௌடி ராஜ்குமாருக்கும், தாதா மணிகண்டனுக்கும் இடையேயான முன்விரோதத்தால் கொலை நடைபெற்றது என்றும், கொலை செய்ய நாட்டு வெடிகுண்டை, பட்டாசு மருந்தில் இருந்து அவர்கள் தயாரித்துள்ளனர் என்றும் மாவட்ட எஸ்.பி. நரேந்திரன் நாயர் தெரிவித்தார்.
    இவர்களைப் போன்ற ரௌடி கும்பலை அடக்க புதுச்சேரி-தமிழக போலீஸார் இணைந்து செயல்பட திட்டம் உள்ளது. வானூர் நீதிமன்றத்தில் ஜனார்த்தனன் ஆஜரான போது கொலை செய்ய இந்தக் கும்பல் திட்டமிட்டது. ஆனால், அப்போது அவர் தப்பிவிட்டார் என்றும் எஸ்.பி. தெரிவித்தார். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 5 அரிவாள்கள், 2 பைக்குகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai