Enable Javscript for better performance
ஆட்சியரகம் எதிரே 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஆட்சியரகம் எதிரே 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

    By விழுப்புரம்,  |   Published on : 15th October 2016 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநாவலூர் அருகே இருதரப்பினர் மோதலில் போலீஸாரின் பாரபட்ச நடவடிக்கையைக் கண்டித்து, ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர்.
     அத்திப்பாக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி நாச்சியம்மாள்(55). இவரது மருமகள்கள், பன்னீர்செல்வம் மனைவி இந்திரா(30), செந்தில் மனைவி செந்தமிழ்ச்செல்வி (25), திருமூர்த்தி மனைவி வள்ளி (30), காசிமணி மனைவி அஞ்சலை (30).
     வெள்ளிக்கிழமை காலை ஆட்சியர் அலுவலகத்துக்கு புகார் மனுவுடன் வந்த இவர்கள், திடீரென கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
     அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விழுப்புரம் தாலுகா போலீஸார், அவர்களைத் தடுத்து நிறுத்தி, விசாரித்தனர்.
     விசாரணையில், அத்திப்பாக்கத்தில் ஆறுமுகம், கொடியான் ஆகிய இரு தரப்பினரிடையே அண்மையில் முன்விரோதம் காரணமாக மோதல் எழுந்துள்ளது. இதில், காயமடைந்தவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
     இது குறித்த புகாரின்பேரில், திருநாவலூர் போலீஸார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை, போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். மேலும், சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
     இந்த மோதல் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ஆறுமுகம் தரப்பினர் மருத்துவமனையில் உள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், போலீஸார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகக் கூறியும் ஆறுமுகம் மனைவி நாச்சியம்மாள் குடும்பத்தினருடன் வந்து, தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
     தற்கொலை மிரட்டல் விடுத்த 5 பேரையும், விழுப்புரம் தாலுகா போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக, திருநாவலூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai