Enable Javscript for better performance
நகர்மன்ற அதிமுக பெண் உறுப்பினரை கத்தியால் குத்தி 42 பவுன் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    நகர்மன்ற அதிமுக பெண் உறுப்பினரை கத்தியால் குத்தி 42 பவுன் கொள்ளை

    By விழுப்புரம்,  |   Published on : 15th October 2016 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் வீட்டில் தனியாக இருந்த அதிமுக பெண் உறுப்பினரை கத்தியால் குத்தி, 42 பவுன் நகைகளை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றார்.
     விழுப்புரம் கல்லூரி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர். இவரது மனைவி சுமதி (37). இவர் 39-ஆவது வார்டு நகர்மன்ற அதிமுக உறுப்பினர்.
     இவர்களது இரு குழந்தைகளும் வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குச் சென்றனர். பின்னர், பன்னீர்செல்வமும் வெளியே சென்றார். வீட்டில் தனியே இருந்த சுமதி கதவை சாத்திவிட்டு தூங்கினார். பிற்பகல் 2.15 மணியளவில் தாழிடப்படாமலிருந்த வீட்டின் பின்பக்க கதவு வழியாக புகுந்த மர்ம நபர் சுமதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த தங்க நகைகளை கழட்டி தருமாறு கூறினார்.
     சுமதி மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரமடைந்த அந்த நபர், அவரது கழுத்து, முதுகில் கத்தியால் குத்தினார்.
     பின்னர், அவர் அணிந்திருந்த தங்க நகைகள், பீரோவிலிருந்த தங்க நகைகள் என மொத்தம் 42 பவுனை திருடிக் கொண்டு, வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த பைக்கில் அந்த நபர் தப்பிச் சென்றார். திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.8.50 லட்சம் என்று கூறப்படுகிறது.
     வீட்டை விட்டு வெளியே வந்த சுமதி அக்கம்பக்கத்தினரிடம் இதுகுறித்து கூறினார்.
     இதையடுத்து, அவர்களது உதவியுடன் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
     தகவலறிந்த விழுப்புரம் நகர போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தனர். மாவட்ட எஸ்.பி. நரேந்திரன் நயார், ஏடிஎஸ்பி ராஜராஜன் ஆகியோர் நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
     ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான விரல்ரேகை நிபுணர்கள் தடயங்கள் சேகரித்தனர். மோப்ப நாய் சோதனையும் நடைபெற்றது.
     சிசிடிவி கேமரா பதிவு... அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் எதிரே சுமதி வீடு உள்ளது. கல்லூரி முன்னுள்ள சிசிடிவி கேமராவில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரின் உருவம் பதிவாகியுள்ளதா? என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai