சுடச்சுட

    

    செண்டூர் வெடிவிபத்து வழக்கு: 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பு

    By DIN  |   Published on : 04th September 2016 11:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள செண்டூரில் நிகழ்ந்த வெடிவிபத்து தொடர்பான வழக்கில், 3 பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை வழங்கி, திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
     செண்டூரில் 2007-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி பாதிராபுலியூரிலிருந்து வெடிமருந்துகள் ஏற்றி வந்த ஜீப், செண்டூர் கிராமம் வழியாக தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த போது வெடித்துச் சிதறியது.
     அப்போது, நிகழ்விடத்தில் பேருந்துக்காக காத்திருந்த மற்றும் சாலையோரம் குடியிருந்த அதே ஊரைச் சேர்ந்த சுந்தரம், முத்து, ஆனந்தாயி, ஜெயக்கொடி, அம்மு, தனலட்சுமி, ஜெயலட்சுமி, ஜீப்பில் பயணம் செய்த பாதிரியாபுலியூரைச் சேர்ந்த ஓட்டுநர் பாபு, தென் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த குமார், பலராமன் உள்ளிட்ட 16 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 17 பேர் காயமும், 7 பேர் பலத்த காயமும் அடைந்தனர்.
     இந்த விபத்தின் போது, அந்தக் கிராமத்தில் இருந்த கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் என ரூ.18.11 லட்சம் மதிப்பிலான 185 வீடுகள், ரூ.10.62 லட்சம் மதிப்புள்ள 59 தொகுப்பு வீடுகள், ரூ.28.75 லட்சம் மதிப்பிலான அரசுப் பள்ளிக் கட்டடங்கள் சேதமடைந்தன.
     இந்த விபத்து தொடர்பாக புதுச்சேரி மாநிலம், மணலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் சேகர் (60), வீடூர் கிராமத்தைச் சேர்ந்த வரதராசு மகன் நாகப்பன் (52) பாதிரியாபுலியூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அண்ணாமலை மற்றும் வெடி மருந்து ஏற்றிச் சென்ற ஜீப்பில் பயணம் செய்த பாதிரியாபுலியூரைச் சேர்ந்த ஓட்டுநர் பாபு, தென் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த குமார், பலராமன் ஆகிய 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
     திண்டிவனம் 2ஆவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் பாபு உள்ளிட்ட 3 பேர் மரணமடைந்து விட்டனர். 216 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
     இந்த வழக்கில் திண்டிவனம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
     வழக்கில் தொடர்புடைய மணலிப்பட்டைச் சேர்ந்த சேகர், வீடுரைச் சேர்ந்த நாகப்பன், பாதிரியாபுலியூரைச் சேர்ந்த அண்ணாமலை ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் 60 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தார். மேலும், சேகருக்கு ரூ.30 ஆயிரம் அபராதமும், நாகப்பன், அண்ணாமலைக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென நீதிபதி செல்வமுத்து குமாரி தீர்ப்பளித்தார்.
     தண்டனை விவரம்: இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304 (2) தெரிந்தே ஆபத்தான முறையில் வெடிபொருள்களை கொண்டு சென்றதற்கு 10 ஆண்டுகள், 324 பிரிவின் கீழ் சொற்பகாயம் ஏற்படுத்தியதற்கு 3 ஆண்டுகள், 326 பிரிவின் கீழ் கொடுங்காயம் ஏற்படுத்தியதற்கு ஆயுள் தண்டனை, 429 பிரிவின் கீழ் அரசுக் கட்டடங்களை சேதப்படுத்தியதற்கு 5 ஆண்டுகள், பிபிடி பிரிவின் கீழ் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதற்காக 10 ஆண்டுகள், 429 பிரிவின் கீழ் ஆடு, மாடுகளைக் காயப்படுத்தியதற்கு 5 ஆண்டுகள், 286 பிரிவின் கீழ் வெடிமருந்து பாதுகாப்பாகக் கொண்டு செல்லாததற்கு 9 மாதங்கள் உள்ளிட்ட 14 பிரிவின் கீழ் 60 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai