சுடச்சுட

  

  உண்டு, உறைவிடப் பள்ளியில் 2 மாணவர்கள் மர்மச் சாவு : திருக்கோவிலூரில் சம்பவம்

  By DIN  |   Published on : 05th September 2016 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள உண்டு, உறைவிடப் பள்ளியில், மாணவர்கள் 2 பேர் மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸார் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   திருக்கோவிலூர், சந்தப்பேட்டையில் உண்டு, உறைவிடப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 92 மாணவ, மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனர்.
   இங்கு மூன்றாம் வகுப்புப் பயின்று வந்த துரிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் அய்யனார் (8), ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பள்ளிக் கழிப்பறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
   தகவலறிந்த திருக்கோவிலூர் போலீஸார் வந்து, அவரது உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
   இதைத் தொடர்ந்து, பள்ளியின் 5-ஆம் வகுப்பு மாணவியான, உயிரிழந்த அய்யனாரின் சகோதரி சுப்புலட்சுமி (11), நான்காம் வகுப்பு மாணவர் அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மகன் ராஜதுரை (8) ஆகியோர் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
   மாணவர் ராஜதுரை தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
   இந்த நிலையில், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் இம்தியாஸ், ராஜவிநாயகம், ஜி.அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் தனசேகர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் முகாம் அமைத்து, பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
   இதே போல, உணவுப் பாதுகாப்பு அலுவலர் கே.சரவணன் தலைமையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள் அனைத்தையும் பரிசோதனை செய்தனர்.
   வருவாய் கோட்டாட்சியர் சு.செந்தாமரை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ், காவல் துணைக் கண்காணிப்பாளர் பா.கீதா ஆகியோர் பள்ளியில் ஆய்வுப் பணி மேற்கொண்டனர்.
   இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ் கூறுகையில், பள்ளியில் மாணவர்களுக்கான பாதுகாப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகே மாணவர்களின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்றார். திருக்கோவிலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
   இணை இயக்குநர் ஆய்வு: இந்நிலையில் உறைவிடப் பள்ளியில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உறைவிடப் பள்ளி சிறப்பு மையங்களின் மாநிலத் திட்ட இணை இயக்குநர் சேதுராமவர்மா, சந்தப்பேட்டையில் உண்டு, உறைவிடப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
   அப்போது அவர், பள்ளி நிர்வாகி செல்வராஜ், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரைத் தனித்தனியாக அழைத்து விசாரித்தார்.
   ஆய்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் கேளுங்கள், எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டுச் சென்றார்.
   இப்பள்ளி நிர்வாகி செல்வராஜூக்கு உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எடைக்கல் பகுதியில் மேலும் ஒரு உண்டு, உறைவிடப் பள்ளி தொடங்குவதற்கான அனுமதியை, மாநிலத் திட்ட இணை இயக்குநர் சேதுராமவர்மா அண்மையில் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் திங்கள்கிழமை பள்ளியில் ஆய்வு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai