சுடச்சுட

    

    போலி ஏடிஎம் அட்டை மோசடி வழக்கில் இலங்கையைச் சேர்ந்தவர் கைது

    By விழுப்புரம்,  |   Published on : 08th September 2016 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    போலி ஏடிஎம் அட்டைகளை தயாரித்து வங்கி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை நூதன முறையில் திருடிய வழக்கில் முக்கிய எதிரியாக கருதப்படும் இலங்கையைச் சேர்ந்தவரை பெங்களூரில் போலீஸார் கைது செய்தனர்.
     விழுப்புரம் மாவட்டத்தில் சில வங்கி ஏடிஎம் மையங்களில் மர்மக் கும்பல் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி, வாடிக்கையாளர்களின் ஏடிஎம் அட்டைகளின் ரகசிய விவரங்களைச் சேகரித்து, போலி எடிஎம் அட்டைகள் தயாரித்து பல கோடி ரூபாய் பணத்தைத் திருடி வந்தது.
     இதுதொடர்பாக, விழுப்புரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் மேலாளர், வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், இந்த நூதன மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
     இதையடுத்து, விழுப்புரம் குற்றப் பிரிவு டிஎஸ்பி வீமராஜ் தலைமையிலான தனிப்படையினர் எதிரிகளைத் தேடி வந்தனர்.
     இதில், கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீஸின் சகோதரர் ராஜாரபீக், ரசூல்மைதீன், திண்டுக்கல்லைச் சேர்ந்த சரவணன், வீரமணி, சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த நூர்முகமது, செஞ்சியைச் சேர்ந்த ஜெயராமன், புதுக்கோட்டையைச் சேர்ந்த பாஸ்கர், திருச்சியைச் சேர்ந்த இப்ராஹிம், பாலக்காடைச் சேர்ந்த முஜ்புர் ரகுமான், போத்தனூரைச் சேர்ந்த அப்துல்லா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையதுஅபுதாகீர், இலங்கையைச் சேர்ந்த முகமது சுஜான், திருச்சியைச் சேர்ந்த பிரசாத், சிக்கந்தர் ஆகிய 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     இவர்களிடமிருந்து, போலி ஏடிஎம் அட்டைகள், ஸ்கிம்மர் இயந்திரம், லேப்டாப்கள், செல்லிடப்பேசிகள், ஏடிஎம் அட்டை தயாரிக்கும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
     அப்துல்அஜீஸ் (35), அவருக்கு வலதுகரமாக செயல்பட்ட இலங்கை தெகில்வாலா பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் மகன் பிரசன்னா (32) உள்ளிட்டோரை போலீஸார் தேடி வந்தனர்.
     இந்த நிலையில், சென்னை பல்லாவரத்தில் பிரசன்னா வசிப்பதையறிந்து, அவரைப் பிடிக்க தனிப்படையினர் அங்கு விரைந்தனர். இதனையறிந்த பிரசன்னா, இலங்கைக்கு தப்பிச் செல்வதற்காக, அங்கிருந்து பெங்களூரூ சென்றார்.
     இதுகுறித்து பெங்களூரு போலீஸாருக்கு விழுப்புரம் போலீஸார் தகவல் தெரிவித்தனர். பெங்களூரூ விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த பிரசன்னாவை, அங்குள்ள போலீஸார் கைது செய்து, விழுப்புரம் தனிப்படை போலீஸில் ஒப்படைத்தனர்.
     அவர்கள் பிரசன்னாவை கைது செய்து, புதன்கிழமை விழுப்புரம் அழைத்து வந்து விசாரித்தனர்.
     தொழில்நுட்பப் பிரிவில் கைதேர்ந்தவரான பிரசன்னா, வெளிநாட்டிலிருந்து, மின்னணு உபகரணங்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பது, ஏடிஎம்மில் ஸ்கிம்மர் பொருத்துவது போன்ற வேலைகளை அப்துல்அஜீஸ் உள்ளிட்ட கும்பலுக்கு செய்து வந்தது தெரிய வந்தது.
     விழுப்புரம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் பிரசன்னாவை போலீஸார் ஆஜர்படுத்தினர். நீதிபதி மும்தாஜ் உத்தரவின் பேரில், அவரை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஏடிஎம் பணமோசடி மோசடி வழக்கில், இதுவரை ரூ.10 லட்சம் பணம், ரூ.30 லட்சம் அளவிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய எதிரியான அப்துல்அஜீஸ் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai