சுடச்சுட

    

    முன்னறிவிப்பின்றி மூடப்படும் ரயில்வே கடவுப்பாதைகள்: அவதிக்குள்ளாகும் கிராம மக்கள்

    By விழுப்புரம்,  |   Published on : 08th September 2016 08:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் பகுதியில் ஆளில்லா ரயில்வே கடவுப்பாதைகளை அறிவிப்பின்றி மூடி வருகின்றனர். இதனால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
     விழுப்புரம் - காட்பாடி ரயில்வே மார்க்கத்தில், விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு -ஒட்டன்காடுவெட்டி இடையே ஆளில்லா கடவுப்பாதையை, சனிக்கிழமை ரயில்வே ஊழியர்கள் மூடும் பணியைத் தொடங்கினர்.
     இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து மறியல் செய்தனர். போலீஸார் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, ஒட்டன்காடுவெட்டி ஊராட்சித் தலைவர் கோவிந்தசாமி தலைமையிலான கிராமத்தினர், விழுப்புரம் ரயில்வே கோட்டப் பொறியாளர் அலுவலகத்துக்கு முறையிடச் சென்றனர்.
     அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாததால் திரும்பி வந்துவிட்டனர். பின்னர், தொழிற்சங்கத்தினர் மூலம் திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் பேசியும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனிடையே, ஒட்டன்காடுவெட்டி ரயில்வே கடவுப்பாதையை மூடவந்த ஊழியர்கள், ஒருவார காலம் அவகாசம் வழங்கிவிட்டு, தாற்காலிகமாக பணியை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
     இதேபோல், மாம்பழப்பட்டு அருகே உள்ள சென்னகுணம் ஆளில்லா ரயில்வே கடவுப் பாதையையும், ரயில்வே ஊழியர்கள் வியாழக்கிழமை மூடியுள்ளனர். இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.
     காணை அருகேயுள்ள கொத்தமங்கலம் ஆளில்லா கடவுப்பாதை, விழுப்புரம் அருகே உள்ள கொளத்தூர் ஆளில்லா கடவுப்பாதைகளையும் ரயில்வே நிர்வாகத்தினர் அறிவிப்பின்றி அண்மையில் மூடியுள்ளனர்.
     ரயில்வே நிர்வாகம் அலட்சியம் காட்டி வரும் நிலையில், இது குறித்து விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதிக் கூட்டத்திலும், பொது மக்களின் கருத்தைக் கேட்பதற்கோ, காரணத்தை விளக்குவதற்கோ ரயில்வே தரப்பில் ஒருவரும் பங்கேற்கவில்லை.
     விபத்துகளைத் தவிர்க்கவே ஆளில்லா கடவுப்பாதைகளை ரயில்வே நிர்வாகத்தினர் அதிரடியாக மூடி வருகின்றனர். இது வரவேற்கக் கூடியதென்றாலும், எந்தவித முன்னறவிப்புமின்றி, திடீர் திடீரென இவ்வாறு மூடும்போது, மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
     கடவுப்பாதைகளைப் பொறுத்தவரையில் அவ்வழியாகச் செல்லும் மக்களின் பயன்பாடு, தேவை இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, அச்சாலையில் ஆளில்லா கடவுப்பாதை அவசியமா? அதனை மூடினால் மாற்றுச் சாலை உள்ளதா? மாற்றுச் சாலை அவர்களுக்கு வசதியான விதத்தில் பயனளிக்குமா? என்பது குறித்து உள்ளூர் நிர்வாகம் மற்றும் பொது மக்களிடம் கருத்துகளைக் கேட்டு, இவ்வாறான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
     தொடர்ந்து, கடவுப்பாதைகள் மூடப்படும் இடங்களில் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதற்கு ரயில்வே அதிகாரிகளும் உரிய பதில் தருவதில்லை.
     மாவட்ட நிர்வாகத்திடம் முயன்றும் நடவடிக்கை எடுக்க வழியில்லாததால், திருச்சிக்குச் சென்று கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம், பாதிக்கப்பட்ட கிராமத்தினர் முறையிட்டும் அலைக்கழிக்கப்படுவதால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
     திருச்சி கோட்டப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கடவுப்பாதைகளை அதிரடியாக மூடி நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், ரயில்வே நிர்வாகம் அதற்கான உரிய காரணங்களைத் தெரிவிப்பதோடு, மாற்று வழிக்கான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் முயற்சி மேற்கொண்டால், போராட்டங்கள் தவிர்க்கப்படும்.
     பொது மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் ரயில்வ நிர்வாகம், அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai