Enable Javscript for better performance
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் "அம்மா' உணவகம் தொடங்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் "அம்மா' உணவகம் தொடங்கப்படுமா?

    By DIN  |   Published on : 11th September 2016 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மலிவு விலையில் உணவு வழங்கும் "அம்மா' உணவகத்தைத் தொடங்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    தமிழக முதல்வர் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி அரசு சார்பில் சென்னையில் "அம்மா' உணவகங்களைத் தொடங்கினார். இங்கு ரூ. 1-க்கு இட்லி, ரூ. 5-க்கு பொங்கல், ரூ. 3-க்கு தயிர் சாதம், ரூ. 5-க்கு சாம்பார், கீரை சாதம், இரவு சப்பாத்தி உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.
    பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இவ்வாறான உணவகங்கள் பிற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டது. இந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் நகராட்சிப் பூங்கா அருகேயும், திண்டிவனத்தில் செஞ்சி சாலை சந்திப்பிலும், கள்ளக்குறிச்சியிலும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    இந்த உணவகங்களில், ஏழைத் தொழிலாளிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் உணவு சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர். நகர்புறங்களில் கூடுதலாக உணவகங்களைத் திறக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு மருத்துவம் பார்க்கவும், உள்நோயாளிகளை கவனித்துக் கொள்ளவும் தினமும் ஆயிரக்கணக்கான வந்து செல்கின்றனர். ஏராளமான ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
    இவர்கள் காலை, மாலை மற்றும் இரவு உணவுக்காக அரசு மருத்துவமனை வளாகத்தைக் கடந்து, வெளியே சென்னை நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள தனியார் உணவகங்களைத் தேடி நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. மேலும், அங்கு கூடுதல் விலையில் விற்கப்படும் உணவை வாங்கிச் சாப்பிடும் நிலை உள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். அவர்களுக்குப் பயனளிக்கும் விதத்தில், இக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகத்தை அமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai