சுடச்சுட

    

    மக்கள் நீதிமன்றம்: 547 வழக்குகளுக்குத் தீர்வு: ரூ.1.55 கோடி இழப்பீடு வழங்கல்

    By DIN  |   Published on : 11th September 2016 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 547 வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டு, ரூ. 1.55 கோடி உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.
    விழுப்புரம் நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆணைக் குழுவின் செயலர் நீதிபதி கிருஷ்ணசாமி வரவேற்றார்.
    முதன்மை குற்றவியல் நீதிபதி சுபா அன்புமணி, நீதிபதிகள் ரவி, விக்னேஷ்பிரபு, மோனிகா, மும்தாஜ் மற்றும் வழக்குரைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    மாவட்ட முதன்மை நீதிபதி சரோஜினிதேவி மக்கள் நீதிமன்றத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: மக்கள் பிரச்னைகளை எளிதில் தீர்ப்பதற்காக இவ்வாறான மக்கள் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்கு உதவிடும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த மக்கள் நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
    குற்ற வழக்குகளில் எதிர்பாராத சூழலில் பிரச்னைகள் ஏற்பட்டு, அது காவல் நிலையம், நீதிமன்றம் வரை சென்று பாதித்தவர்கள் அவதிப்பட வேண்டியுள்ளது. இதில், விட்டுக்கொடுத்தோ, மன்னித்தோ ஒருவருக்கொருவர் சமாதானம் செய்து கொண்டால் வழக்குகள் எளிதில் முடிவுக்கு வரும்.
    இதேபோல் விபத்து, விவாகரத்து, சிவில் வழக்குகளிலும், இரு தரப்பினரும் ஏற்ற இறக்கநிலை பாராமல் விட்டுக்கொடுத்து, மக்கள் நீதிமன்றம் வாயிலாக சமாதானமாக செல்ல வேண்டும் என்றார்.
    இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,931 குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 499 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. 100 சிவில் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 5 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
    இதேபோல் 250 மோட்டார் வாகன விபத்து வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 43-க்கு தீர்வு காணப்பட்டது.
    இந்த வகையில், மொத்தம் 2,281 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 547 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
    இதன் மூலம், ரூ. 1 கோடியே 55 லட்சத்து 59 ஆயிரத்து 573 வசூலிக்கப்பட்டு, உரியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai