சுடச்சுட

  

  மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளங்களை பொது மக்களே மண் கொட்டி தாற்காலிகமாக சீரமைத்தனர்.
   மரக்காணம் வழியாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், கரிப்பாளையம், பவாத்வளைவு, தாழங்காடு கிராமத்தை ஒட்டிய பகுதிகளில் ஆபத்தான சாலை வளைவுகள், பள்ளங்கள் உள்ளன.
   இதனால், அப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு, பலர் உயிரிழந்துள்ளனர். இச் சாலை வளைவுப் பகுதிகளைச் சரிசெய்து, சாலையின் மத்தியில் தடுப்புக் கட்டைகள் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
   இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு அங்குள்ள சாலை வளைவுப் பகுதிகளை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைத்தனர். ஆனால், சீரமைப்புப் பணியைப் பாதியில் விட்டதால், சாலையின் மத்தியில் பல இடங்களில் குண்டும், குழியுமாக பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டன.
   இது குறித்து, அப்பகுதி மக்கள் மீண்டும் புகார் தெரிவித்தனர். ஆனால், சாலையைப் பராமரித்து வரும் ஒப்பந்த நிறுவனமோ, நெடுஞ்சாலைத் துறையோ இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
   இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு, அங்கு சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து கணவன், மனைவி உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர்.
   இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை மரக்காணம், கரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து, சாலையின் பள்ளங்களில் மண்ணைக் கொட்டி தாற்காலிகமாக சீரமைத்தனர்.
   மரக்காணம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆபத்தான சாலைப் பள்ளங்களை சீரமைத்திட, நெடுஞ்சாலைத் துறையினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai