சுடச்சுட

    

    கர்நாடக அரசைக் கண்டித்து போராட்டம்: 42 பேர் கைது

    By விழுப்புரம்/திருக்கோவிலூர்/உளுந்தூர்பேட்டை,  |   Published on : 14th September 2016 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     விழுப்புரம் அருகே உள்ள காகுப்பம் சாலை சந்திப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென திரண்ட அப்பகுதி இளைஞர்கள், கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், கர்நாடக முதல்வரைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     அப்போது, அவர்கள் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உருவப்படத்தை எரித்தனர். தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் செந்தில்விநாயகம் தலைமையிலான போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.
     14 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், பாமகவைச் சேர்ந்த நெடுஞ்செழியன், இளையராஜா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
     விழுப்புரம் அருகே பெரியதச்சூர் காலனி பகுதியில் காலை 9.30 மணிக்கு திரண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை மறித்து, கர்நாடகத்தைக் கண்டித்து கோஷமிட்டனர்.
     விரைந்து சென்ற பெரியதச்சூர் போலீஸார், மறியலில் ஈடுபட்ட பிரசாந்த், நந்தகுமார், சம்பத், பழனி ஆகியோரை கைது செய்தனர்.
     முன்னதாக, திங்கள்கிழமை இரவு கர்நாடக மாநிலப் பகுதியிலிருந்து விழுப்புரத்திற்கு காய்கறி ஏற்றி வந்த மினிடெம்போ வேனை, புதிய பேருந்து நிலையம் எதிரே மறித்த இளைஞர்கள் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸார் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் வெங்கட்(24), சூர்யா(20) ஆகியோரை கைது செய்தனர்.
     திருக்கோவிலூர்
     கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மீதான வன்முறைக்குக் காரணமான கர்நாடக அரசைக் கண்டித்து, திருக்கோவிலூர் பேருந்து நிலையம் முன், நாம் தமிழர் கட்சியினர் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     தகவலறிந்த திருக்கோவிலூர் போலீஸார் விரைந்து வந்து, ரிஷிவந்தியம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
     தவாக பிரமுகர் போராட்டம்
     காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடக அரசைக் கண்டித்து, உளுந்தூர்பேட்டையில் தவாக பிரமுகர் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
     தமிழக வாழ்வுரிமை கட்சியின் விழுப்புரம் மாவட்ட தொண்டர் படை அமைப்பாளரான ஞா.சந்தோஷ், காவிரி பிரச்னையில் கர்நாடக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து, செவ்வாய்க்கிழமை பிற்பகல் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.
     தகவலறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய சந்தோஷை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
     அவர் மயக்கமடைந்ததால் அவரை 108 அவசர கால ஊர்தி உதவியுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai