சுடச்சுட

  

  உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள், சுயேச்சைகள்!

  By நமது நிருபர், விழுப்புரம்  |   Published on : 15th September 2016 10:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளிவராத நிலையில், பதவிகளைப் பிடிக்க அரசியல் கட்சியினரும், சுயேச்சைகளும் தயாராகி வருகின்றனர்.
   தமிழகத்தில் உள்ளாட்சிப் பதவிகளுக்கான காலம் அக்டோபர் 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரப்படுத்தியுள்ளது.
   இந்த மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அக்டோபரில் தேர்தலை நடத்தி முடிக்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் தயாராகி வருகின்றனர். வாக்காளர்களை சேர்ப்பது, கிளை, வார்டு வாரியாக புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது தொடர்பான பணிகளை பெரும்பாலும் முடித்து விட்டனர்.
   சுயேச்சைகள் தீவிரம்: உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சியினருக்கு அப்பாற்பட்ட நிலையில், கிராமப்புறங்கள், நகர்ப் பகுதிகளில் ஊராட்சித் தலைவர், உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், மாவட்ட உறுப்பினர்களுக்கான போட்டிக்கு சுயேச்சையாக போட்டியிட பலரும் தயாராகி வருகின்றனர்.
   விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி, 3 நகராட்சிகள், 15 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்கள், 1,099 ஊராட்சிகள் உள்ளன.
   இதில் பேரூராட்சித் தலைவர், உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என 1,140 தலைவர் பதவிகள் உள்ளிட்ட சுமார் 4,500 உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
   பதவிகளைப் பிடிக்க களமிறங்க விரும்பும் போட்டியாளர்கள் உள்ளூர் சேவைப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
   இதன் எதிரொலியாக கிராமப்புறங்கள், நகர்ப் பகுதிகளில் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பொதுமக்களுடன் திரண்டு சென்று முறையிட்டு வருகின்றனர்.
   தற்போது பொறுப்பில் உள்ளவர்களின் மீதான குறைகள், புகார்களை தெரிவிப்பதும், தங்கள் பகுதி மக்களுக்கான தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள அதிகாரிகளை சந்தித்து முறையிடுவதும் அதிகரித்துள்ளது. இதனால், அரசு அலுவலகங்களில் கூட்ட நெரிசலுக்கு பஞ்சமில்லை.
   இவர்களில் சிலர் உள்ளூரிலும், வாக்குறுதிகளை அள்ளிவிட்டு, தாராளமாக செலவிட்டு தேர்தல் பணியை தற்போதே தொடங்கியுள்ளனர்.
   சுழற்சி முறை மாறுதலுக்கு எதிர்பார்ப்பு: இதனிடையே, இந்த உள்ளாட்சித் தேர்தலில் தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கு பொது, மகளிர் மற்றும் இன சுழற்சி ஒதுக்கீடு போன்ற மாற்றம் அதிகளவில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான மாற்றம் மேற்கொள்ளப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையில் குழப்பமும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
   தேர்தல் ஆணையத்திலிருந்து இதற்கான பட்டியல் தயாராகி வந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், கடந்த இரு நாள்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேரூராட்சி, நகராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்கள் பகுதிக்கான சுழற்சி முறை பதவி நிலவரத்தை அரசியல் கட்சியினரும், உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட உள்ளவர்களும் கேட்டபடி உள்ளனர்.
   
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai