சுடச்சுட

  

  கர்நாடக அரசைக் கண்டித்து தொடரும் போராட்டம்

  By விழுப்புரம்,  |   Published on : 15th September 2016 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வானூர் உள்ளிட்ட இடங்களில் கர்நாடக அரசைக் கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை வழங்காமல் முடக்கி வரும் கர்நாடக அரசைக் கண்டித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வன்முறையில் ஈடுபட்டு வரும் கர்நாடக அரசியல் கட்சிகளைக் கண்டித்தும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வானூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், நாம் தமிழர் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு கண்டன உரையாற்றினார்.
   காவிரி, பாலாறு, சிறுவாணி, பவானி, முல்லைப் பெரியாறு நதிநீர் பிரச்னைகளில், நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், தமிழகத்தில் மீத்தேன் எடுத்தல், கெயில் திட்டங்களைத் திரும்பப்பெறுதல், கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைப் பறிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
   வானூரில்
   கர்நாடகாவில் காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் அம்மாநில அரசியல் கட்சியினரைக் கண்டித்து, வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் நாம் தமிழர் கட்சியினர் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
   மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். தலைவர் அலாவுதீன், துணைத் தலைவர் அருளிங்கம், செயலர் சரவணன், ஒன்றியச் செயலர் முத்துவேல் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர். தொடர்ந்து அவர்கள், கர்நாடக முதல்வரின் உருவப் படத்தை தீயிட்டு எரித்தனர்.
   ஆரோவில் போலீஸார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
   கள்ளக்குறிச்சி
   கள்ளக்குறிச்சியில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் உருவ பொம்மையை எரித்ததாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
   காவிரி நீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து கள்ளக்குறிச்சி சேலம் - சென்னை நெடுஞ்சாலை, நான்கு முனை சந்திப்பில் தமிழர் கட்சி, தெற்கு மாவட்டத் தலைவர் ப.ராதாகிருஷ்ணன், தெற்கு மண்டலச் செயலர் க.கு.சங்கர் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக வந்த அக்கட்சியினர், தொடர்ந்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் உருவ பொம்மையை எரித்தனர்.
   இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 7 பேரை கச்சிராயப்பாளையம் போலீஸார் மற்றும் தியாகதுருகம் போலீஸார் கைது செய்தனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai